Published : 11 Mar 2023 11:22 AM
Last Updated : 11 Mar 2023 11:22 AM

ஹோலி கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டுப் பெண்ணுக்கு துன்புறுத்தல் - சிறுவன் உட்பட 3 பேர் கைது

பிரதிநித்துவப்படம் | படம்: கே.ஆர். தீபக்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த பெண்ணைத் துன்புறுத்திய விவகாரத்தில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸார் வெளியிடுள்ள அறிக்கையில், "அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் வீடியோவில் உள்ள சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வீடியோவில் இருக்கும் சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திலோ, ஜப்பான் தூதரகத்திலோ புகார் ஏதும் தெரிவிக்காத நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருப்பவர்களின் மீது டெல்லி போலீஸ் சட்டப்படியான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் ஏதும் கொடுத்திருந்தால் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, இந்த விவகாரத்தில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையத்தலைவர் ஸ்வாதி மாலிவால், இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம் என்று தெரிவித்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும் பாஜக பிரமுகருமான குஷ்பு கூறுகையில், இது அருவருப்பூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பெண் துன்புறுத்தல் விவகாரம் டெல்லியிலுள்ள பகர்ஹஞ்ச் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடந்துள்ளது. சம்பவம் குறித்து அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். பின்னர் அந்த வீடியோ அழிக்கப்பட்டது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது சமீபத்திய ட்வீட்டர் பதிவில், தான் தற்போது வங்கதேசத்தில் இருப்பதாகவும் உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x