Last Updated : 12 Dec, 2022 11:45 PM

 

Published : 12 Dec 2022 11:45 PM
Last Updated : 12 Dec 2022 11:45 PM

ராமநாதபுரம் | இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை பெட்டியில் சீல் வைத்து நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்.  

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த காரில் கொண்டுவரப்பட்ட ரூ.160 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில், கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருட்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட, சென்னையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சத்திரக்குடி அருகே போகலூர் சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற சென்னையைச் சேர்ந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த இருவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துடன், இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதனையடுத்து அவர்கள் இருவரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று இன்று மாலை வரை விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் காரில் கடத்தி வந்தது, சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களான 50 கிலோ கஞ்சா ஆயில் மற்றும் 38 கிலோ கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனத் தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.160 கோடி இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருட்களை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த லியோ பாக்கியராஜ் (39), தனசேகரன் (32) ஆகிய இருவரையும் கைது செய்து, ராமநாதபுரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த போதைப்பொருளை சென்னையிலிருந்து கார் மூலம் கடத்தி வந்து மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்க இருந்ததாக கைதான இருவரும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின், பீடி இலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள் உள்ளிட்டவை கடத்துவது அதிகரித்துள்ளது. அதேபோல் இம்மாவட்ட கடல் வழியாக இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வருவதும் அதிகரித்துள்ளது. மத்திய, மாநில உளவுப்பிரிவினர், இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை, சுங்கத்துறையினர், தமிழக மரைன் போலீஸார், உள்ளூர் போலீஸார் என பல பாதுகாப்பு அமைப்புகள் இருந்தும் கடத்தல் கட்டுப்படுத்தப்படவில்லை. சமீப காலமாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினரே அவ்வப்போது பெரிய அளவிலான தங்கம் கடத்தல், போதைப்பொருள் கடத்தலை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x