Published : 13 Nov 2022 04:50 AM
Last Updated : 13 Nov 2022 04:50 AM

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி

மதுரை: சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, சரண்யா(எ)கலைச்செல்வி, குமுதவல்லி ஆகியோர் புத்தாடை மற்றும் அழகு சாதனப் பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி 2017-ல் திருப்பூருக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு போதை மாத்திரைகளை கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். சிறுமியின் பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். போலீஸாருக்கு சிறுமி திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கலைச்செல்வி, குமுதவல்லி ஆகிய இருவரும் சிறுமியை திருப்பூரைச் சேர்ந்த கல்பனா, சிவக்குமார், மணி ஆகியோருடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீஸார், கலைச்செல்வி, குமுதவல்லி, கல்பனா, சிவக்குமார், மணி ஆகிய 5 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கை கரூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து, சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது, போக்சோ உள்ளிட்ட குற்றங்களுக்கு 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க 2019-ல் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து 5 பேரும் உயர் நீதிமன்றக் கிளையில் தனித்தனியே மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்து நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றபோது, அதிக தொகை இழப்பீடாக வழங்கப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்ததை ஏற்க முடியாது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனுதாரர்கள் இழைத்த கொடூரத்தை இழப்பீட்டின் மூலம் அகற்ற முடியாது. பாதிக்கப்பட்டவரின் மானம், மரியாதையை திருப்பித் தர முடியாது. அந்தச் சிறுமி வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளார். மனுதாரர்களுக்கு கீழ் நீதிமன்றம் பல்வேறு பிரிவுகளின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அது ஒரு ஆயுள் தண்டனையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஜாமீனில் உள்ளவர்கள் உடனடியாக கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x