Published : 06 Nov 2022 06:42 AM
Last Updated : 06 Nov 2022 06:42 AM

இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4.50 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் - ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த தரகர்கள்

இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட லஞ்ச பணம். (உள்படம்) லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது சார் பதிவாளர் அலுவலக ஜன்னலில் மறைத்து வைத்திருந்த 500 ரூபாய் கட்டு பணம். 

நாகர்கோவில்: இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.4.5 லட்சம் பணம் சிக்கியது. தரகர்கள் லஞ்ச பணத்தை வீசி எறிந்ததால், அலுவலகத்தை சுற்றி ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு புரோக்கர்கள் மூலம் அதிக அளவில் லஞ்சப் பணம் பெறுவதாகவும், முறைப்படி பதிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அலைகழிக்கப்படுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரகசியமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

குமரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர்பால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீஸார் வருவதை அறிந்த தரகர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். மேலும் பத்திரப் பதிவுக்கு லஞ்சமாக கொடுக்க வைத்திருந்த 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசி எறிந்தனர். இதனால், அலுவலகத்தை சுற்றி ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. புரோக்கர்கள் 6 பேரையும், பத்திரப்பதிவு உதவியாளர்கள் 3 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிடித்தனர்.

அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த மற்றும் வீசி எறிந்த பணம் என மொத்தம் ரூ.4,48,800 பறிமுதல் செய்யப்பட்டது. சார் பதிவாளர் (பொறுப்பு) சுப்பையா மற்றும் அலுவலர்களிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று காலை 5.30 மணியளவில் இந்த சோதனை முடிந்தது. சார் பதிவாளர் (பொறுப்பு) சுப்பையா, 6 தரகர்கள் என மொத்தம் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x