Published : 04 Nov 2022 07:41 AM
Last Updated : 04 Nov 2022 07:41 AM

சென்னை | அரசு பேருந்தை மறித்து அதன்முன் சிறுவர்கள் நடனமாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பிடிபட்டனர்

சென்னை: அரசு பேருந்தை மறித்து அதன்முன் நின்று கொண்டு நடனமாடி வீடியோ எடுத்த சிறுவர்கள் போலீஸாரிடம் பிடிபட்டனர். சென்னையிலிருந்து காசிமேடு வழியாக அரசு பேருந்து ஒன்று இரு தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தபோது கொட்டும் மழையில் இளைஞர்கள் இருவர் அரசு பேருந்தை வழி மறித்தனர். திடீரென அவர்கள் பேருந்தின் முன்நடனமாடினர். இதை நண்பர் ஒருவர்மூலம் வீடியோ எடுத்தனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதற்காக இதுபோன்ற வீடியோவை அவர்கள் எடுத்துள்ளனர்.

அவசர வேலையாகப் பேருந்தில் பயணித்த பயணிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பேருந்து ஓட்டுநரும் செய்வதறியாது திகைத்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தார். இதை அந்த வழியாகச் சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சென்னை காவல் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி சைபர் க்ரைம் போலீஸார் சம்பந்தப்பட்ட வீடியோவை பார்வையிட்டு அதன் மூலம் துப்பு துலக்கினர். இதில் பேருந்து முன்நடனமாடி ரீல்ஸ் செய்தது கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பதுதெரியவந்தது. இதையடுத்து அவர்களது பெற்றோரை நேரில் வரவழைத்து கண்டித்தனர்.

மேலும், அவர்கள் சில தினங்களுக்குப் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்எனக்கூறி அனுப்பி வைத்தனர்.ரீல்ஸ் என்ற பெயரில் பொது இடங்களில் அத்துமீறுபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். சமீபகாலமாக ‘ரீல்ஸ்' எனப்படும் ஷார்ட் வீடியோ கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், இளம் பெண்கள், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கவனம் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவ - மாணவியரும் இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ், பேஸ்புக் ரீல்ஸ், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஆகியவற்றில் வித்தியாசமாக ஏதாவது செய்து பதிவிடுவதை விரும்புகின்றனர். அதன் நீட்சியாகவே தற்போது ஓடும் பேருந்தை மறித்து சிறுவர்கள் ரீல்ஸ் செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x