Published : 03 Oct 2022 04:31 PM
Last Updated : 03 Oct 2022 04:31 PM

கர்நாடகா | சிறுவனை ஆடையின்றி வழிபாடு செய்யவைத்த மூவர் மீது வழக்குப் பதிவு; வைரல் வீடியோவால் நடவடிக்கை

கொப்பள்: கர்நாடக மாநிலத்தில் 16 வயது சிறுவனை ஆடையின்றி வழிபாடு செய்யுமாறு மூவர் துன்புறுத்தியுள்ளனர். அதோடு அதனை வீடியோவாக செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் அந்த மாநிலத்தின் கொப்பள் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆடையின்றி கடவுளை வணங்கினால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் மற்றும் கடன் பிரச்சினைகள் தீரும் என அந்தச் சிறுவனை மூவரும் நம்பவைத்து, இந்தச் செயலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆடையின்றி கடவுளை வணங்கினால் உடனடியாக பணம் கிடைக்கும் என சிறுவனிடம் அவர்கள் சொல்லியுள்ளனர். பின்னர் ஹூப்ளி நகரில் உள்ள விடுதி ஒன்றுக்கு அந்தச் சிறுவனை அழைத்து சென்றுள்ளனர். அங்குதான் சிறுவன் ஆடையின்றி வழிபாடு செய்துள்ளார். தொடர்ந்து தங்கள் போனில் அதைப் படம் பிடித்து அந்த வீடியோவை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளதை அறிந்த சிறுவன், போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சரணப்பா, விரூபன கவுடா மற்றும் சரணப்பா தளவாரா ஆகிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதோடு இந்த வழக்கு தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x