Published : 29 Sep 2022 06:54 AM
Last Updated : 29 Sep 2022 06:54 AM

தாம்பரம் அருகே வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த ரவுடியை சுட்டு பிடித்த போலீஸார்: மோதலில் காவலர் ஒருவர் காயம்; மற்றொரு ரவுடிக்கு வலை

பிரபல ரவுடி சச்சினை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த தகவலை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். உடன் துணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரிகள். படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: தாம்பரம் அருகே பிரபல ரவுடி சச்சினை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த காவலர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாம்பரம் அடுத்த எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின் (29). இவர் மீது சோமங்கலம், மணிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, வழிப்பறி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோமங்கலம் காப்புக் காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சோமங்கலம் காவல் ஆய்வாளர் ஜெ.சிவக்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை 3 மணியளவில் ரவுடி சச்சினை பிடிப்பதற்காகச் சென்றனர். இதை அறிந்த சச்சின் போலீஸாரை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளாா். அதிர்ஷ்டவசமாக அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் பாஸ்கரை வெட்டியுள்ளாா். இதில், காவலர் பாஸ்கர் (45) படுகாயமடைந்தார். இதையடுத்து தற்காப்புக்காக ஆய்வாளர் சிவகுமார் சச்சினின் முழங்காலுக்கு கீழே 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடி சச்சின் படுகாயமடைந்து சுருண்டு கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து ரவுடியை கைது செய்த போலீஸார் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சச்சின்

காயமடைந்த காவலர் பாஸ்கர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சச்சினுடன் இருந்த ரவுடி பரத் தப்பினார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் கூறும்போது, 2 குண்டுகள் சச்சினின் வலது காலில்பட்டன. காயமடைந்த காவலர் பாஸ்கரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளார் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x