Published : 16 Sep 2022 10:12 PM
Last Updated : 16 Sep 2022 10:12 PM

குஜராத் | வாடிக்கையாளர்களுக்கு பீஃப் பரிமாறிய உணவக உரிமையாளர் கைது

பிரதிநிதித்துவப் படம்.

சூரத்: குஜராத் மாநிலத்தில் தனது உணவகத்திற்கு உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு மாட்டிறைச்சி பரிமாறிய காரணத்திற்காக சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹிந்து அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரின் ஹோடிபங்களா என்ற பகுதியில் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த ஹிந்து அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை அவர்கள் உறுதி செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் அதுகுறித்து உடனடியாக லால்கேட் காவல் நிலையத்தின் காவலர்கள் வசம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் காவலர்கள் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக சொல்லப்பட்ட உணவகத்தில் கடந்த ஞாயிறு (செப்டம்பர் 11) சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில் சுமார் 6 பைகளில் 60 கிலோ மாட்டிறைச்சி இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

அதையடுத்து அந்த இடத்திற்கு கால்நடை மருத்துவ வல்லுனரை அழைத்து, அவர் முன்னிலையில் மாதிரியை சேகரித்து, அதனை பரிசோதிக்க தடயவியல் நிபுணர்களிடம் தந்துள்ளனர். அவர்களும் அதை ஆய்வு செய்து காவல் துறையினர் வசம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில் அது மாட்டிறைச்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடந்த 14-ம் தேதி அந்த உணவகத்தின் உரிமையாளர் சர்ப்ராஸ் முகமது வாசிர் கானை கைது செய்துள்ளனர். குஜராத் விலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் இந்த நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. மாட்டிறைச்சியை வாசிர் கானுக்கு விற்பனை செய்தவர் தலைமறைவு ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x