Published : 08 Jun 2022 06:47 AM
Last Updated : 08 Jun 2022 06:47 AM

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்பனை செய்த 1,180 பேர் கைது

திருச்சி: திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்தஓராண்டில் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் 565 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கஞ்சா விற்றதாக 1,180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மண்டல ஐ.ஜி.யாகவே.பாலகிருஷ்ணன்2021, ஜூன் மாதம் பொறுப்பேற்றார். ஓராண்டுகள் பணிபுரிந்த நிலையில்தற்போது கோவை மாநகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தசூழலில், மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 755 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 1,180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்53 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா மொத்த விற்பனையில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவிற்பனையில் ஈடுபட்டு, சட்ட விரோத வழியில் பணம் சேர்த்த46 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்குகள் 25% குறைவு

அதேபோல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் ஒரு வருடத்தில் 561 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, 184 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 2,030 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

மேலும்,கடந்த ஓராண்டில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கைகள் காரணமாக, ரவுடிகள் சம்பந்தப்பட்ட கொலை வழக்குகள் வெகுவாக குறைந்து இந்தாண்டில் 2 ரவுடிகொலை வழக்குகள் மட்டுமே மத்திய மண்டலத்தில் பதிவாகி உள்ளன. மேலும், இந்த ஆண்டில் பதிவான கொலை வழக்குகளை ஒப்பிடுகையில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் குறைந்துள்ளது.

இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய மண்டலத்துக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் 13,879 கிராமங்களில் கிராமகாவல் இணைய வழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள்உருவாக்கப்பட்டு 7,328 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 193 கல்லூரிகள், 623 பள்ளிகளிலும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக கடந்தாண்டு நவ.1-ம் தேதி முதல் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து வீடு வீடாக சென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவசர தொடர்பு எண்கள் 1098, 191 மற்றும் சட்ட பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. மத்திய மண்டலத்துக்குட்பட்ட 13,879 கிராமங்களில் 11,72,687 குடும்பங்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக சந்தித்து, இதுவரை 25,300 இடங்களில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.

297 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர போக்ஸோ வழக்குகளில் தொடர்புடைய 160 பேர் மீது குற்றச் சரித்திர பதிவேடு ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கிராமங்களில் கண்காணிப்பை அதிகரிக்கும் வகையிலும், குற்றங்களை குறைக்கும் நோக்கத்துடனும், ஊராட்சித் தலைவர்கள் மூலம் 418 சிசிடிவி கேமராக்கள் திருச்சி சரகத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான கொலை மற்றும் அடிதடி வழக்குகள், நிலத் தகராறு காரணமாக இருப்பதால் மத்திய மண்டலத்திலுள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா அளவில் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், நில அளவையர்கள் அடங்கிய ‘தாலுகா ஒருங்கிணைப்பு தீர்வுக் குழுக்கள்’ அமைக்கப்பட்டு நிலப் பிரச்சினை தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்த ஓராண்டில் 908 புகார்கள் விசாரிக்கப்பட்டு, தீர்வுகாணப்பட்டுள்ளன.

காவல் கவசங்கள் திட்டம்

‘காவல் கவசங்கள்’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டு கரோனாவால் பெற்றோர்களை இழந்த865 குழந்தைகளை தத்தெடுத்துஅவர்களின் பாதுகாப்புக்கும், வழிகாட்டுதலுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனியாக வாழும் 1,267 முதியோர்களை கண்டறிந்து இ-பீட் செயலி மூலம் அவர்களை இணைத்து, அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 103 பேர் மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களில் 17 பேர் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x