Published : 29 May 2022 04:00 AM
Last Updated : 29 May 2022 04:00 AM

தவறான முடிவால் பல்லாவரம் அருகே பரிதாபம்: மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பொறியாளர் - போலீஸார் விசாரணை

பல்லாவரம்

பல்லாவரம் அருகே மனைவியையும் தனது 2 குழந்தைகளையும் கொலை செய்த மென்பொறியாளர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). தரமணியில் ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி காயத்ரி (39). அதேபகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். பொழிச்சலூர் மண்டல பாஜக மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு நித்யஸ்ரீ (13) என்ற மகளும் சாய்கிருஷ்ணா (8) என்ற மகனும் உள்ளனர். மகள் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் மகன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பிரகாஷின் வீட்டுக்கு அவரது மாமனார் ரமணன் வந்துள்ளார். நீண்டநேரம் அழைப்பு மணியை அழுத்தியும் யாரும் கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது மகள், மருமகன், பேரக்குழந்தைகள் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்த சங்கர் நகர் போலீஸார் விரைந்து வந்தனர்.

மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மனைவி, குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த பிரகாஷ் பின்னர், தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. கழுத்தில் இயந்திரம் இருந்த நிலையில் பிரகாஷின் உடலையும் மற்ற சடலங்களையும் போலீஸார் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் கடன் தொல்லையால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து சங்கர் நகர் போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி, துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, பல்லாவரம் உதவி ஆணையர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் ரவி கூறியதாவது:

‛இந்த முடிவுக்கு யாரும் வற்புறுத்தவில்லை. நாங்களே எடுத்த முடிவு’ என்று பிரகாஷ் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி சுவற்றில் ஒட்டியுள்ளார். அதன் ஒரு பிரதி, நோட்டிலும் வைத்துள்ளார். இருப்பினும், பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 19-ம் தேதி, ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மரம் அறுக்கும் இயந்திரத்தை வாங்கியுள்ளார். அவரது 2 செல்போன்களிலும் பேசியவர்கள் யார், கடன் கேட்டு தொல்லை கொடுத்தவர்கள் யார், இந்த முடிவுக்கு யாராவது தூண்டினார்களா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்படும். கொலைக்கு முன்பாக மனைவி, குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மனஅழுத்தமோ தற்கொலை எண்ணமோ உண்டானால், அதில் இருந்து மீள, மாநில உதவி மையம்: 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x