Published : 19 May 2022 07:27 AM
Last Updated : 19 May 2022 07:27 AM

திருச்சி | காதலித்து திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு: கிராம முக்கியஸ்தர்கள் மீது வழக்குப் பதிவு

திருச்சி: காதலித்து திருமணம் செய்ததால் ஒரு குடும்பத்தினரை மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராம முக்கியஸ்தர்கள் மீது குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள தெற்கு எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் மனைவி செல்லபாப்பா(60).

இவரது மகன் ஜெகதீசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணமக்கள் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், அதன் உட்பிரிவு வேறு வேறாக இருந்ததால் காதல் திருமணத்தை ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் செல்லபாப்பா குடும்பத்தை ஊரிலிருந்து ஒதுக்கி வைத்ததுடன், கோயில் திருவிழாக்களுக்கும் வரி வாங்காமல் தவிர்த்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த செல்லபாப்பா, தனது குடும்பத்தினரிடம் தலைக்கட்டு வரி வசூலித்து, ஊர் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பெற்று வந்துள்ளார். ஆனாலும், 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவில் செல்லபாப்பா குடும்பத்தினர் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, செல்லபாப்பா அளித்த புகாரின்பேரில் கிராம நாட்டாண்மை குண்டு பெரியசாமி, முக்கியஸ்தர்களான ஆர்.சின்னசாமி, மாயவன் (எ) சிவலிங்கம், எஸ்.சின்னசாமி, சவுந்தரராஜ், சண்முகம், மோகன்தாஸ், வெள்ளைச்சாமி, ஊசானி கோவிந்தராஜ் ஆகிய 9 பேர் மீது குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறுகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x