

விஏஓ அரவிந்த், உதவியாளர் ரவி
ஆவடி: லஞ்சம் வாங்கியது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டனர். ஆவடி, காமராஜர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (32).
இவர் தனது தாயார் பெயரில் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், கோவில்பதாகை கிராம உதவியாளர் ரவி, செல்போன் மூலம் சங்கரை தொடர்பு கொண்டு விஏஓ அலுவலகத்துக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
சங்கர் கடந்த 25-ம் தேதி அங்கு சென்று விஏஓ அரவிந்தை சந்தித்துள்ளார். அப்போது அவர் கிராம உதவியாளர் ரவியிடம் பேசுமாறு கூறியுள்ளார்.
அதன்படி ரவியிடம் பேசியபோது, அவர் வாரிசு சான்றிதழ் அளிக்க பரிந்துரைக்க ரூ.10 ஆயிரம் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.8 ஆயிரம் தருவதாக சங்கர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சங்கர், இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
பின்னர் அவர்களின் ஆலோசனையின்படி, நேற்று காலை கிராம உதவியாளர் ரவியிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை சங்கர் அளித்தார்.
அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் லஞ்சம் பெற்றதாக ரவியை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விஏஓ அரவிந்தையும் கைது செய்தனர்.