Published : 05 May 2022 08:04 AM
Last Updated : 05 May 2022 08:04 AM

ஓடும் ரயிலில் நகை தொழிலாளர்கள் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை திருட முயற்சி: கொள்ளையர்களை 1 மணி நேரத்தில் பிடித்த தனிப்படையினர்

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் நகை தொழிலாளர்கள் முகத்தில் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து 5 கிலோ எடையுள்ள தங்கத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக இருவரை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம் (45). இவர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் நகைக்கடைகளில் ஆபரண தங்க நகைகள் ஆர்டர் எடுத்து, நகைகளை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும், கோவை செல்வபுரத்தில் நகை பட்டறையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்த 3 கோடி மதிப்புள்ள 5 கிலோதங்க நகைகளை, விநியோகம் செய்வதற்காக தன்னிடம் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த நகை தொழிலாளர்களான மாரி முத்து (30), அய்யனார்(26) ஆகிய இருவரிடமும் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை கொடுத்து, சேரன் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த ரயில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது. அப்போது, மாரிமுத்து மற்றும் அய்யனார் ஆகியோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அதே பெட்டியில் பயணம் செய்த மர்ம நபர்கள் 2 பேர், நகை தொழிலாளர்களிடம் இருந்த 5 கிலோ தங்க நகைகளை திருட முயன்றனர்.

அப்போது, திடுக்கிட்டு கண் விழித்த மாரிமுத்து மற்றும் அய்யனார் ஆகிய இருவரின் முகத்திலும் மர்ம நபர்கள் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்தனர். இதனால் இருவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டு கூச்சலிட்டனர். உடனே, அதே பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் கண்விழித்து எழுந்தனர். இதைக்கண்ட மர்ம நபர்கள் இருவரும் நகைப் பையை அங்கேயே விட்டு விட்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பிச் சென்றனர்.

அங்கு பணியில் இருந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் இதுகுறித்து விசாரித்தனர். தொடர்ந்து, பெப்பர் ஸ்பிரேவினால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸில் நகை தொழிலாளி மாரிமுத்து புகார் அளித்தார். அதன்பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கேரளாவைச் சேர்ந்தவர்கள்

இந்நிலையில், ஜோலார்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சுற்றித் திரிந்த 2 பேரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். இருவரும் கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப்(30) மற்றும் சூரஜ்(26) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள், 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஒரு மணிநேரத்துக்குள் கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினருக்கு ரயில்வே எஸ்பிஅதிவீரபாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x