Published : 14 Apr 2022 03:34 PM
Last Updated : 14 Apr 2022 03:34 PM

அம்பத்தூரில் ரூ.82 லட்சம் வழிப்பறி வழக்கு: முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் கைது: பணம் மீட்பு

சென்னை: தாம்பரம் - புழல் புறவழிச் சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் கடந்த ஏப்.10-ம் தேதியன்று, பைக்கில் சென்றவரை தாக்கி ரூ.82 லட்ச ரூபாய் பணம் வழிப்பறி செய்த வழக்கில் தனியார் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீஸார், கொள்ளையர்களிடமிருந்து ரூ.72 லட்சத்தை மீட்டுள்ளனர்.

ரூ.82 லட்சம் வழிப்பறி: சென்னை மாதவரம் பால்பண்ணை படவட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் விஜயகுமார் தனது நிறுவனத்திலிருந்து ரூ.82 லட்சம் பணத்தை பெரிய பையில் எடுத்து கொண்டு கடந்த ஏப்.10-ம் தேதியன்று, பைக்கில் கொடுங்கையூரில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு சென்றார்.இவர் தாம்பரம் - புழல் புறவழிச் சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இவரது பைக்கைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்து உள்ளனர். பின்னர் இவரைத் தாக்கி இவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அவர்கள் வந்த பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். படுகாயமடைந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

தகவல் அறிந்து துணை ஆணையர் மகேஷ், அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிசாரணை நடத்தினர். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் மல்லிகா தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேர் கும்பலைத் தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு: சம்பவ நடந்த இடத்தின் அருகில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில், பல்சர் பைக்கில் வந்த 3 நபர்கள் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதிபடுத்தினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பைக்கின் உரிமையாளர் சந்தோஷ் மற்றும் அவரது உறவினர் விஜய் ஆகியோரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அப்பு (எ) ஸ்ரீகாந்த், (20) , டமால் (எ) தனுஷ்(19) சந்துரு(19 ) ஆகியோர் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அப்பு (எ) ஸ்ரீகாந்த், டமால் (எ) தனுஷ் ஆகியோரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழிப்பறியில் தொடர்புடைய பள்ளிக்கரணையை சேர்ந்த சந்துரு மற்றும், மதுரவாயலை சேர்ந்த சுப்ரமணி( 42) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியிருப்பது: கடந்த 2021-ம் ஆண்டு சுப்ரமணி வழிப்பறி செய்யப்பட்டுள்ள அதே தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்த போது, தனது நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததற்காக மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்த இவருக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிறையில் இருந்து வந்த அப்பு (எ) ஸ்ரீகாந்துடன் சுப்ரமணிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது தனது நிறுவனத்தில் இருந்து கொடுங்கையூருக்கு பணம் கொண்டு செல்வது குறித்து அப்பு (எ) ஸ்ரீகாந்திடம் சுப்ரமணி தெரிவிக்க கொடுங்கையூருக்கு பணத்தை கொண்டு செல்லும் போது பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.இதன்படி, கடந்த ஏப்.10-ம் தேதி, இருசக்கரவாகனத்தில் வந்த விஜயகுமாரைபின்தொடர்ந்து சென்று அவரை கத்தியால் தாக்கி ரூ.82.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

பாராட்டு: இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து, குற்றம் சாட்டப்பட்ட அப்பு (எ) ஸ்ரீகாந்தின் தாயார் பிரேமாவிடம் இருந்து ரூ.72 லட்சம் பணத்தை மீட்ட தனிப்படை போலீஸாருக்கு ஆவடி மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x