Published : 31 Mar 2022 08:44 AM
Last Updated : 31 Mar 2022 08:44 AM

கேரள பெண்ணுக்கு தொல்லை; போலி சினிமா தயாரிப்பாளர் பிடிபட்டார்: ஆன்லைனில் புகாரளித்த சிறிது நேரத்தில் நடவடிக்கை

சென்னை: கேரள பெண்ணுக்கு தொல்லை கொடுத்த போலி சினிமா தயாரிப்பாளர் சென்னையில் பிடிபட்டார். கேரள பெண் அங்கிருந்தவாறே ஆன்லைன் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் ஆணையர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். போலீஸாரின் துரித நடவடிக்கைக்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘ நான் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறேன். அதில், நான் பதிவிட்ட எனது புகைப்படங்களை பார்த்த ஒருவர், அவரை சினிமா தயாரிப்பாளர் எனவும், சென்னை வடபழனியில் வசிப்பதாகவும் கூறி சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி தவறான நோக்கத்துடன் அழைக்கிறார்.

மேலும், எனது உடலை ஆபாசமாக ரசித்து, அந்த ரசனையை சமூக வலைதளங்களில் சொற்களாக பதிவிடுகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து வடபழனி போலீஸார் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் கேரள இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியிலான சீண்டலில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘பிடிபட்ட நபர் சினிமா தயாரிப்பாளர் இல்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

ஆன்லைன் புகாரின்பேரில் போலீஸார் எடுத்த துரித நடவடிக்கைக்கு கேரள பெண் காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x