Published : 25 Jan 2022 01:23 PM
Last Updated : 25 Jan 2022 01:23 PM

தென்காசி: நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட ரூ.3.65 லட்சம் மீட்பு

நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட ரூ.3.65 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீஸார் மீட்டு, உரியவரிடம் சேர்த்தனர்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவர், ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் தனது தாயாருக்கு ரூ.1.69 லட்சத்தை வங்கியின் செயலி மூலம் அனுப்பியுள்ளார். அந்த பணம் தொழில்நுட்ப கோளாறால் அவரது தாயாருக்கு கிடைக்கவில்லை.

இதனால், வங்கியின் உதவி எண்ணை தொடர்புகொள்வதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், தவறான எண்ணை தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். மறு முனையில் பேசிய நபர், வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதுபோல் ஏமாற்றி, சுந்தரவேலை ‘any desk app’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 999 ரூபாயை அபகரித்துள்ளார்.

இதுகுறித்து, சுந்தரவேலின் மனைவி சுமதி தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஏடிஎஸ்பி சுவாமிநாதன் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி நடவடிக்கை எடுத்து, பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கச் செய்து, மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு, ஒப்படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x