Published : 21 Dec 2021 08:21 AM
Last Updated : 21 Dec 2021 08:21 AM

வேலூரில் பிரபல நகைக் கடையில் திருடிய நபர் பிடிபட்டார்: மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு

வேலூர்: வேலூரில் பிரபல நகைக்கடையின் சுவரை துளையிட்டு ரூ.15 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிக்கிய நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட மொத்த தங்க நகைகளையும் போலீஸார் மீட்டனர்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக் கடையில், கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர், 12 கண்காணிப்பு கேமராக்கள் மீது ஸ்பிரே அடித்து காட்சிப் பதிவுகளை மறைத்து நகைகளை திருடிச் சென்றார்.

மொத்தம், 15 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள், நெக்லஸ்கள், தங்க சங்கிலிகள், கம்மல்கள் மற்றும் 1,113 கிராம் வைர நகைகள், 100.577 கிராம் பிளாட்டினம் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 கோடிக்கும் அதிகம் என தெரிகிறது. இதுகுறித்து, கடையின் மேலாளர் பிரதீஷ் அளித்த புகாரின்பேரில் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘முகமூடி அணிந்தபடி நகை திருட்டில் ஈடுபட்ட நபரின் உருவத்துடன் இருக்கும் நபர் ஒருவர் கடைக்கு வந்து சென்றது, கடைக்கு எதிரில் உள்ள ஜவுளி கடைக்கு வந்து சென்ற வீடியோ பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அந்த நபரின் படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பியதுடன் வேலூர் மத்திய சிறையில் உள்ள சில குற்றவாளிகளிடம் காண்பித்து விசாரிக்கப்பட்டது.

டீக்காராமன்

இதில், பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஏற்கெனவே நகை திருட்டு மற்றும் தனியார் பள்ளியில் லேப்டாப் திருட்டு வழக்கில் சிக்கி கைதான குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்பதை உறுதி செய்தோம். அவர் குறித்து விசாரித்தபோது, ஒடுக்கத்தூரில் 2 நாட்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறியதும் தெரியவந்தது.

அந்த வீட்டை பழைய குற்றவாளி ஒருவர் மூலம் அடையாளம் கண்டு நேற்று முன்தினம் அதிகாலை அவரை சுற்றிவளைத்துப் பிடித்தோம். அந்த வீட்டில், நகைக்கடை திருட்டில் ஈடுபட்டபோது பயன்படுத்திய ஸ்வெட்டர் மற்றும் சிங்க முகமூடி ஆகியவை இருந்தன.

அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த தங்க கவச ருத்ராட்ச சங்கிலி நகைக் கடையில் திருடியது என்பதையும் உறுதி செய்தோம். ஆனால், தனக்கும் நகை திருட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என போக்கு காட்டி வந்தார்.

ஒடுக்கத்தூரில் புதிய வீடு வாடகைக்கு சென்ற நாளில் அருகில் ஏதாவது மயானம் உள்ளதா என அங்கிருந்த சிலரிடம் டீக்காராமன் விசாரித்துள்ளார். இந்த தகவல் எங்கள் கவனத்துக்கு வந்தது. அதன் அடிப்படையில் ஒடுக்கத்தூர் மயானத்தில் தேடியபோது மண்ணில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்கப்பட்டன. அந்த இடத்தையும் நகைகளையும் டீக்காராமன் உறுதிசெய்தார். இந்த வழக்கின் விசாரணை இந்த ஆண்டின் மிகச்சிறந்த வழக்காகும்” என கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x