Published : 11 Dec 2021 04:00 PM
Last Updated : 11 Dec 2021 04:00 PM

இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி உருவாக்கி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கோவை இளைஞர் கைது

திருப்பூர் சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நியாஸ்

திருப்பூர்

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பெண் போல் போலியான புகைப்படத்தை பதிவிட்டு போலி ஐடி உருவாக்கி, பெண்ணை போலவே நடித்து திருப்பூர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த கோவை இளைஞரை, திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:

கோவை குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நியாஸ் (23). இவர் தனது அலைபேசியில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து, இதில் இவருடன் பழக்கமான திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி உள்ளார். நட்புடன் பழகி வந்ததை அடுத்து, கல்லூரி மாணவியுடன் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார். படங்களை பெற்ற நியாஸ் அதனை மார்பிங் செய்து ஆபாச படமாக உருவாக்கி, அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி உள்ளார். மேலும் நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும் இல்லை என்றால் இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து கல்லூரி மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நியாசை கைது செய்து, அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றினர்.

இணையதளத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக பாலியல் தொந்தரவு செய்த நபர் குறித்து கல்லூரி மாணவி, திருப்பூர் மாநகர காவல் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தவுடன் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட நியாசை கைது செய்து அலைபேசியை பறிமுதல் செய்தனர் அவரது அலைபேசியை பார்த்த போது, பல்வேறு இளம் பெண்களின் அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நியாஸ் மீது, தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை சட்டம் 2001 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீஸார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகர போலீஸார் கூறியதாவது, "பொதுவாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கங்கள் மூலம், இன்றைக்கு அறிமுகமில்லாத நபர்களிடம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

ஆகவே முகநூல், இன்ஸ்டாகிராம் உட்பட பல்வேறு சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும் என, தொடர்ந்து போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஒரே மாதிரியாக பல இளம்பெண்களை ஏமாற்றி இந்த வேலையை செய்துள்ளார். ஆகவே இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x