மேலூர் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது - நடந்தது என்ன?

Updated on: 
1 min read

மதுரை: மேலூர் அருகே சிறுவன் முத்துவேல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், முத்துவேலுடன் விளையாடிய சிறுவன் மற்றும் அவனது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் கிராமத்தில் நேற்று முன்தினம் (அக்.25) விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேலன் மாயமானார். இது தொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

90 போலீஸார் அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அப்பகுதியில் தீவிர தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காலை 10.45 மணி அளவில் சிறுவனின் உடல் அங்குள்ள ராஜாங்கம் என்பவருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.

இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸாரின் விசாரணையில், கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் விளையாட்டாக முத்துவேலின் கழுத்தில் கயிற்றை இறுக்கியதாகத் தெரியவந்தது.

அப்போது ஓடிய முத்துவேல் கோயில் சுவரில் மோதி விழுந்ததில், அவரது முன்பற்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், அந்த 10 வயது சிறுவனின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்ட முத்துவேல், அங்கு சிறுவனின் தாயார் சந்தியா (32) முன்னிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

முத்துவேல் உயிரிழந்ததை அறிந்த சந்தியா, தனது மகனின் செயலை மறைக்கவும், அதுதொடர்பான ஆதாரங்களை அழிக்கவும் சிறுவனின் உடலைப் பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக சந்தியாவை போலீஸார் கைது செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய 10 வயது சிறுவன் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சிறுவன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் கீழவளவு காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக விரிவாக பேட்டி அளித்த நிலையில், விபரீத விளையாட்டுகளை, பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளில் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலூர் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது - நடந்தது என்ன?
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி? - வெளியான அதிர்ச்சி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in