

தேனி: சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு, தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி அருகே மாவட்ட சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. நான்கு பிளாக்குகளாக உள்ள இந்த சிறையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டாவது பிளாக்கில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி, சிவகங்கை மாவட்டம் சுந்தர நடப்பு பகுதியைச் சேர்ந்த தருண்குமார், மதுரை சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த பாண்டிசெல்வம், மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி, மதுரை ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்த பொன்முத்துசெல்வம், மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், சேலம் மாவட்டம் தடகப்பாடி பகுதியைச் சேர்ந்த சபரிநாதன், கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த ரெஜின், மதுரை கீழக்குயில்குடி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், மதுரை வாடிப்பட்டி முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த முத்து இளங்கோவன், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, மதுரை ஆளவந்தான் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற லிங்க பிரசாத், மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த ராஜா சிக்கந்தர், தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சோலை முகிலீஸ்வரர் மற்றும் தேனியை சேர்ந்த பிரவீன்குமார் உள்ளிட்ட 17 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் போதைப்பொருள், திருட்டு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு நோய் வந்ததாக திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு இவர்கள் பெருங்குரலில் அலறினர். இதனைத் தொடர்ந்து காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்ட மூன்று போலீஸார், அடைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்தனர். அப்போது அவர்கள் ஒட்டுமொத்தமாக சூழ்ந்து போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காவலர் தங்கப்பாண்டிக்கு தலையில் பலத்த காயமும், மற்ற இருவருக்கும் லேசான காயமும் ஏற்பட்டது. இவர்களுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேவேளையில், கைதிகள் தப்பிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் நேரில் சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினார். சிறைச்சாலையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் பணியை மும்முரப்படுத்தினர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. சிறைச்சாலை பகுதியைச் சுற்றிலும் உள்ள வயல், மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதனிடையே, தப்பிய கைதிகளில் நான்கு பேர் பிடிபட்டனர். தனிப்படைகளுக்கு தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி அவசர ஆலோசனைகளை அளித்தார்.
அதேவேளையில், இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கைதிகள் தப்பியது குறித்து விசாரணை நடத்தும் பணிகளில் சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஈடுபட்டுள்ளார். தப்பியோடிய கைதிகளை பிடிக்க, தமிழ்நாடு - கேரளா எல்லை மற்றும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தேனி சிறையில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 பேர் தப்பிச் சென்ற சம்பவம் போலீஸ் மற்றும் சிறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.