Published : 18 Feb 2021 02:13 PM
Last Updated : 18 Feb 2021 02:13 PM

சாலை விபத்தில் கடலோரக் காவல்படை அதிகாரியின் 2 வயது மகள் பலி: ஓட்டுநர் தப்பி ஓட்டம்

சென்னையை அடுத்த ஐயப்பந்தாங்கல் அருகே நடந்த சாலை விபத்தில் கடலோரக் காவல் படையின் துணை கமாண்டண்ட்டின் 2 வயது மகள் பலியானார். தாத்தா, பாட்டியுடன் உற்சாகத்துடன் வெளியில் வந்தபோது நிகழ்ந்த சம்பவம் சோகத்தில் முடிந்தது.

சென்னை கடலோரக் காவல் படையின் துணை கமாண்டன்ட்டாகப் பதவி வகிப்பவர் ராஜேந்திர ஆதவ். இவர் ஐயப்பந்தாங்கல் ராமதாஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் ஆதிரா என்கிற மகள் இருந்தார். ராஜேந்திர ஆதவ்வுடன் அவரது தந்தை ரங்கநாதன் (70), தாய் பரமேஸ்வரி (61) ஆகியோர் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

தாத்தா, பாட்டி இருவரும் பேத்தியை மிகவும் பாசமாகப் பார்த்துக் கொண்டனர். வாய்ப்பு கிடைக்கும்போது பேத்திக்கு விளையாட்டு காட்டுவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி பரமேஸ்வரியையும் அழைத்துக்கொண்டு பேத்தியுடன் விளையாட்டு காட்டுவதற்கு அருகில் உள்ள இடங்களுக்குச் சென்று வருவது வழக்கம். நேற்று மாலையும் வழக்கம்போல் பேத்தி ஆதிராவை இருசக்கர வாகனத்தின் முன்னாள் அமரவைத்துக்கொண்டு பின்னால் மனைவியை அமரவைத்துக் கொண்டு தாத்தா ரங்கநாதன் சென்றார்.

செந்தூர்புரம் மெயின் ரோடு, காட்டுப்பாக்கம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்தபோது குழந்தை ஆதிரா திடீரென கீழே தவறி சாலையில் விழுந்தது. அப்போது பின்னால் சாலையில் வேகமாக வந்த டிராக்டர், குழந்தை ஆதிரா மீது ஏறியது. இதில் குழந்தை பலத்த காயம் அடைந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டிராக்டரை ஓட்டிவந்த ஓட்டுநர் அஜித் (எ) வெங்கடேசன் டிராக்டருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்தில் உயிரிழந்தது.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் ஐபிசி பிரிவு 279 (பொதுவெளியில் தாறுமாறாக வாகனத்தைச் செலுத்துதல்), 304 (எ) ( உயிரிழப்பு ஏற்படும் விதத்தில் விபத்தை ஏற்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநர் அஜித்தைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x