Last Updated : 14 Oct, 2020 05:41 PM

 

Published : 14 Oct 2020 05:41 PM
Last Updated : 14 Oct 2020 05:41 PM

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் தனியார் பணி ஒப்பந்ததாரர் வெட்டிக் கொலை

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் தனியார் பணி ஒப்பந்ததாரர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அடுத்த தர்மாபுரி பகுதியை சேர்ந்தவர் ஜீவா (42). இவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவர் தற்போது காந்திதிருநல்லூர் பகுதியில் புதிதாக தொழிற்சாலை தொடங்க உள்ளார்.

இதற்காக புதிய கட்டிடம் கட்டி வருகிறார். இன்று (அக். 14) அவர் அந்த தொழிற்சாலை பணிகளை பார்வையிட மோட்டார் பைக்கில் சென்றார்.

மேட்டுப்பாளையம் மின்துறை அலுவலகம் அருகே சென்ற போது 3 மோட்டார் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டிச் சென்று தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்தவுடன் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் பிரியா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த கொலை குற்றவாளிகள் சிலர் ஜீவாவிடம் மாமுல் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில்போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x