

மதுரை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பேத்கர் சுவர் ஓவியத்தின் மீது பெயின்ட் ஊற்றி சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கீழவளவு பகுதியில் சாலையோரம் அம்பேத்கர் உருவம் வரையப்பட்ட தனிச்சுவர் ஒன்று இருக்கிறது. இந்த சுவர் மீது மர்மநபர்கள் பெயிண்ட் ஊற்றியுள்ளனர்.
இதனால் அம்பேத்கரின் முக அமைப்பு மறைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதிவாசிகள் அம்பேத்கர் சுவர் ஓவியத்தை சேதப்படுத்தியவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மக்கள் போலீஸாரின் வாக்குறுதியை ஏற்று கலைந்து சென்றனர். திடீர் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோஷ்டி மோதலால் நடந்த சம்பவமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.