செயின் பறிப்பு கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த அலங்காநல்லூர் போலீஸார்: கை கொடுத்த ஜூடோ பயிற்சி

படம்: சிறப்பு ஏற்பாடு. காவலர் மூவேந்தன் (இடது); காவலர் காளிராஜ் (வலது)
படம்: சிறப்பு ஏற்பாடு. காவலர் மூவேந்தன் (இடது); காவலர் காளிராஜ் (வலது)
Updated on
1 min read

மதுரை

மதுரை மாவட்டம் வாடிபட்டி, சோழவந்தான் பகுதிகளில் அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை அலங்காநல்லூர் போலீஸார் இருவர் சினிமா பாணியில் 2 கி.மீ. தூரம் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். இதில், காவலர் காளிராஜ் ஜுடோ போட்டியில் மாநில அளவில் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மாதாகோயில் வாசலில் நேற்று(திங்கள்கிழமை) மாலை 3 மணியளவில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அவரிடம் பைக்கில் வந்த இருவர் 3 பவுன் நகையைப் பறித்து தப்பினர்.

அந்தப் பெண் உடனே வாடிப்பட்டி போலீஸுக்கு தகவல் கொடுத்தார். கொள்ளையர்கள் சென்ற பைக்கின் எண் மற்றும் அவர்களின் அடையாளத்தைக் கூறியுள்ளார். இதனையடுத்து எஸ்ஐ அண்ணாதுரை சோதனைச் சாவடி மற்றும் ரோந்து போலீஸாரை உஷார் படுத்தினார்.

இதற்கிடையில், மாலை 4.15 மணியளவில் சோழவந்தான் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் அதே இளைஞர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணியளவில் குமாரம் அருகே வழிப்பறி கொள்ளையர்களின் பைக்கை அலங்காநல்லூர் காவலர்கள் மூவேந்தன், காளிராஜ் அடையாளம் கண்டுள்ளனர். உடனே கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் போலீஸாரின் வாகனத்தின் மோதிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். ஆனால், கொள்ளையர்களும் கீழே விழுந்தனர்.

கொள்ளையர்களுடன் காவலர்கள் கட்டிப் புரண்டு சண்டையிட்டுள்ளனர். கொள்ளையர்கள் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் தப்பிச் செல்ல முயல, அவர்களை விடாமல் சுமார் 2 கி.மீ. தூரம் துரத்திப் பிடித்துள்ளனர். இதில் காவலர் காளிராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும், அவர் அறிந்த ஜூடோ தற்காப்புக் கலை அவருக்குத் துணையாக இருந்துள்ளது. கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த காவலர்கள் மூவேந்தன், காளிராஜ் மற்றும் மைக்கில் உஷார் படுத்திய எஸ்.ஐ. அண்ணாதுரை ஆகியோரை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், டிஎஸ்பி ஆரோக்கியராஜ் பாராட்டினர்.

இந்நிலையில், காவலர்களுக்கு பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in