Published : 12 Sep 2019 08:24 PM
Last Updated : 12 Sep 2019 08:24 PM

பள்ளிக்கரணையில் பரிதாபம்: பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சாலையில் விழுந்த இளம்பெண் லாரிமோதி உயிரிழப்பு

சென்னை

பள்ளிக்கரணையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார்.

சென்னையில் பிளக்ஸ் பேனர்கள் கட்டுவது குறித்து வரைமுறை வகுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சாலையில் செல்பவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது, பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்காமல் சாலை ஓரம் வைக்கவேண்டும் என பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆனால் பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் அதுகுறித்து கவலைப்படுவதில்லை.

அதிகாரிகளும் அதை கண்காணிப்பதில்லை. கடந்த ஆண்டு கோவையில் பேனர்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பில் மோதி ரகு என்ற மென்பொறியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அடுத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. குரோம்பேட்டை பவானி நகர், பவானி தெருவில் வசிப்பவர் ரவி இவரது மகள் சுபஸ்ரீ (23). இவர் பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில் இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அந்த பகுதியில் சென்னை, கோவிலம்பாக்கம் ஜெ.டி.திருமண மஹாலில் நடைபெற்ற காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பள்ளிக்கரணை முன்னாள் கவுன்சிலர் சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, துரைப்பாக்கம் – பல்லாவரம் சாலையின் இருபுறமும், சாலையின் நடுவே தடுப்புச் சுவரிலும் பேனர்கள் வைத்திருந்துள்ளனர்.

அவ்வாறு சாலை தடுப்பில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் ஒன்று திடீரென சரிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதில் சுபஸ்ரீ நிலை தடுமாறி தனது இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்துள்ளார். அப்போது அவருக்குப் பின்புறமாக வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது ஏறி இறங்கியது.

இதில் சுபஸ்ரீயின் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சுபஸ்ரீ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சாலையில் சென்ற இளம்பெண் உயிரை பறிபோக காரணமாக அமைந்துள்ளது. சுபஸ்ரீ கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்தார். அதற்கான தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனங்கள் இருந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் சாலையில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது குறித்து கடுமையாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. கடந்த வாரம் பிளக்ஸ் பேனர்கள் அமைப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் லாரி ஓட்டுனர் மனோஜ் என்பவரை கைது செய்தனர். 279, 336, 304 A ஆகிய IPC பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விபத்துக்கு காரணமான பேனர் வைத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x