

பல்லாவரம்: விரைவில் பணக்காரர்களாகும் ஆசையில் கஞ்சா விற்பனையில் இறங்கிய இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநீர்மலை சுடுகாடு அருகே நேற்று 3 இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக சங்கர் நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டனர்.
அதில் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா, 2 செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரையும் கைதுசெய்து விசாரித்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த ராஜா (25), ஸ்டீபன் ராஜ் (28), பல்லாவரம் கண்டோன்மென்ட் பாரத் நகரைச் சேர்ந்த நிர்மல் ராஜ் (24) என்பது தெரியவந்தது.
விரைவில் பணக்காரர்களாகிவிடலாம் என்ற ஆசையில் ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனை செய்ய முயன்றபோது போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். 3 பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.