

ஆடு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.
முட்டுக்காடு: கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு, கானத்தூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகளைத் திருடி வந்த கறிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சள்போடு பகுதியைச் சேர்ந்த பலரது வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடுகள் கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன.
இதையடுத்து அவர்கள் கானத்தூர் போலீஸில் கடந்த வாரம் புகார் அளித்தனர். இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆடு திருடர்களைத் தேடும்பணி நடைபெற்றுவந்தது.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் முதலில் இருசக்கர வாகனங்களில் வந்து ஆடுகள் இருக்கும் இடங்களைக் கண்காணிப்பதும், பின்னர் கார் அல்லது ஆட்டோவில் வந்து ஆடுகளைத் திருடிச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (32), கதிரவன் (22) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடிய ஆடுகளை, கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தில் கறிக்கடை நடத்தி வரும் மோத்தி பாபு (40) என்பவரிடம் விற்பனை செய்ததாகக் கூறினர். இதையடுத்து மோத்தி பாபுவையும் போலீஸார் கைது செய்தனர்.
மோத்தி பாபு மீது 2022-ம் ஆண்டு வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஆடு திருடிய வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மோத்தி பாபு, மணிகண்டன், கதிரவன் ஆகிய மூவரும் இணைந்து இதுவரை 25-க்கும் மேற்பட்ட ஆடுகளைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, கொட்டிவாக்கத்தில் உள்ள மோத்தி பாபுவின் கறிக்கடையிலிருந்து 3 ஆடுகளும், மணிகண்டனின் மாமியார் வீட்டிலிருந்து 2 ஆடுகளும், நந்தம்பாக்கத்தில் உள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகளும் என மொத்தம் 15 ஆடுகளை போலீஸார் மீட்டனர்.
இதையடுத்து மணிகண்டன், கதிரவன், மோத்தி பாபு ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து, சோழிங்கநல்லூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.