

கார்த்திகேயன், வேலு, சந்திரசேகர்
சென்னை: சென்னை சாஸ்திரி நகர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருடிய கார் ஓட்டுநர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார். சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (29). சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கலெக் ஷன் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 12-ம் தேதி வசூலான ரூ.2 கோடியை அலுவலக அறையில் உள்ள மர பீரோவில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.2 கோடி மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையன் ஒருவன் நிதி நிறுவனத்தின் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து, அலுவலகத்துக்குள் சென்று பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் பணத்திருட்டில் ஈடுபட்டது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பது தெரிந்தது. அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த வேலு (36), சந்திரசேகரன் (33) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இவர்களையும் போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், நிதி நிறுவனத்தில் அதிகளவில் பணம் இருப்பதை அறிந்த கார்த்திகேயன், தனது நண்பர்களுடன் சேர்ந்து திருட திட்டம் தீட்டியது தெரியவந்தது.
சம்பவத்தன்று இரவு அவர்கள் காரில் நிதி நிறுவனத்துக்கு வந்து, கார்த்திகேயன் மட்டும் தலைக்கவசம் அணிந்து உள்ளே சென்று சாவியை எடுத்து பீரோவை திறந்து பணத்தை திருடிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செலவு செய்தது போக ரூ.1 கோடியே 97 லட்சத்து 94 ஆயிரம் ரொக்கம் மீட்கப்பட்டது. மேலும் 3 செல்போன்கள் மற்றும் குற்றச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டன.