சென்னையில் குடும்பத்துடன் மருத்துவர் தற்கொலை; மனைவி, 2 மகன்கள் என 4 பேர் தூக்கில் தொங்கினர்: நடந்தது என்ன?

தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் பாலமுருகன் மனைவி சுமதி உடன். (அடுத்த படம்) அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு.
தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் பாலமுருகன் மனைவி சுமதி உடன். (அடுத்த படம்) அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு.
Updated on
2 min read

சென்னை அண்ணாநகரில் ரூ.5 கோடி கடன் தொல்லையால், மருத்துவர் அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் என 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் பாலமுருகன்(53). இவர் சென்னையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். கொளத்தூரில் சொந்த வீடு உள்ளது. அண்ணா நகரில் இரண்டு ஸ்கேன் சென்டர், செங்குன்றத்தில் இரண்டு ஸ்கேன் சென்டர்களை நடத்தி வந்தார். தொழில் நிமித்தமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறினார்.

இவரது மனைவி சுமதி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர். குடும்ப வேலைப்பளுவால் சமீபகாலமாக நீதிமன்றத்துக்குச் செல்வதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த தம்பதியின் மூத்த மகன் ஜஸ்வந்த் குமார்(19). பிளஸ் 2 முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். மற்றொரு மகன் லிங்கேஷ்குமார்(17) அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் வேலைக்கார பெண்மணி ரேவதி, வழக்கம்போல் நேற்று (மார்ச் 13) காலை பாலமுருகனின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை போன் செய்தும் யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து மருத்துவரின் கார் ஓட்டுநர் விஜய்க்கு ரேவதி தகவல் தெரிவித்தார்.

பின்னர் ரேவதி, கார் ஓட்டுநர் விஜய், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஜெயராமன் ஆகியோர் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். சுமதியும் மூத்த மகன் ஜஸ்வந்த் குமாரும் ஒரு அறையிலும், மருத்துவர் பாலமுருகன் மற்றொரு அறையிலும், சிறிய மகன் லிங்கேஷ்குமார் பூஜை அறையிலும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீஸார், உடல்களைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், ஸ்கேன் சென்டர் தொழிலை விரிவாக்க ரூ.5 கோடி வரை வங்கிகளில் மருத்துவர் பாலமுருகன் கடன் பெற்றுள்ளார். இதற்காக, மாதம் ரூ.6 லட்சம் வரை தவணைத் தொகை செலுத்தி வந்துள்ளார். இதுதவிர நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் தொழில் விருத்திக்காக பாலமுருகன் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாததால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். மனைவி சுமதியிடமும் இதுகுறித்து கூறி புலம்பி அழுதுள்ளார்.

இந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என முடிவு எடுத்துள்ளனர். வியாழக்கிழமை இரவு உணவுக்குப் பின், இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மருத்துவர் பாலமுருகனைப் பார்க்க, அவரது வீட்டுக்கு பலர் வந்து போவதுண்டு. அந்த வகையில் கடன் கொடுத்தவர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்து மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in