

போதை ஊசி பயன்படுத்தியது தொடர்பான விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி, மாத்திரை பயன்படுத்தி வருவதுடன், விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 7-ம் வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(36) உள்ளிட்ட 13 பேரை பிடித்துச் சென்று, நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 200-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், 10-க்கும் மேற்பட்ட ஊசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை வெள்ளனூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் விக்னேஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக விக்னேஸ்வரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “விக்னேஸ்வரன் அடிக்கடி போதை ஊசி பயன்படுத்தி வந்ததால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், போதை ஊசி செலுத்திக் கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கிறார்” என்றனர்.
நீதிபதி விசாரணைக்குப் பிறகே பிரேதப் பரிசோதனை நடைபெறும் என்று தெரிகிறது. விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.