Published : 22 May 2024 05:02 AM
Last Updated : 22 May 2024 05:02 AM

காரைக்குடியில் நகை வியாபாரியை தாக்கி 75 பவுன் கொள்ளை: பொதுமக்கள் முன்னிலையில் முகமூடி திருடர்கள் துணிகரம்

காரைக்குடியில் நகை வியாபாரியிடம் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது குறித்து விசாரணை நடத்திய போலீஸார்.

காரைக்குடி: காரைக்குடியில் பொதுமக்கள் முன்னிலையில் நகை வியாபாரியை தாக்கிவிட்டு, 75 பவுன் நகைகள், 7 கிலோ வெள்ளியை முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த நகை வியாபாரி சரவணன் (41). இவர் சென்னையில் வாங்கிய 75 பவுன் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளியுடன் பேருந்தில் நேற்று அதிகாலை காரைக்குடிக்கு வந்தார்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மற்றொரு பேருந்தில் ஏறி, ஐந்துவிளக்கில் இறங்கிய அவர், தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, முகமூடி, ஹெல்மெட் அணிந்து 3 இருசக்கரவாகனங்களில் வந்த 6 பேர் கத்தியை காட்டி மிரட்டி, சரவணனிடம் இருந்த நகை பைகளை பறிக்க முயன்றனர்.

இந்த நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அருகேவந்தால் குத்திவிடுவதாக அவர்களை மிரட்டிய கொள்ளையர்கள், சரவணனை தாக்கி, அவரிடம் இருந்து 2 நகை பைகளையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

பகல் நேரத்தில் பொதுமக்கள்முன்னிலையில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்பேரில் காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில் 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் கொண்ட 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சரவணன் தனக்காக 7 கிலோ வெள்ளியும், காரைக்குடியில் உள்ள மற்ற நகைக்கடை வியாபாரிகளுக்காக 75 பவுன் நகைகளையும் சென்னையில் இருந்து வாங்கி வந்துள்ளார். அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் நகைகளை பறித்து சென்றுள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 19-ம் இரவு சிவகங்கை, மானாமதுரை பகுதியில் 2 வங்கிகள், 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒரு வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது. அதேபோல, 20-ம் தேதி (நேற்றுமுன்தினம்) நடந்து சென்ற மென்பொறியாளர் ஒருவரிடம் மடிக்கணினி, பணத்தை முகமூடிஅணிந்த 6 பேர் பறித்து சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் இக்காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வரும் நிலையில், முகமூடி கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x