

சிவகாசி: சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 61 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து சிவகாசி - சாத்துார் சாலையில் புதன்கிழமை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்த போது, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
காரில் வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான முனியசாமி, தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த ஓட்டுநர் செய்யது சுல்தான் ஆகியோரை கைது செய்த சிவகாசி கிழக்கு போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 61 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வத்திராயிருப்பு அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.