Published : 08 May 2024 09:57 AM
Last Updated : 08 May 2024 09:57 AM

எம்எல்ஏக்கள் பெயரில் பணம் பறித்த முதியவர் கைது: ஈரோடு சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை 

ஈரோடு: கோவை அதிமுக எம்எல்ஏ. உள்ளிட்டவர்களின் பெயரில் பணம் பறித்த, நாகர்கோவிலைச் சேர்ந்த முதியவரை, ஈரோடு சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் சமூக வலைதளங்கள், போன் செயலிகள் மூலம், மற்றவர்களின் பெயரைப் பயன்படுத்தி, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளவர்களின், நண்பர்களைத் தொடர்பு கொண்டு அவசர தேவைக்காக பணம் கேட்பது போல் மோசடி செய்யும் சம்பவங்கள், தினந்தோறும் நடந்து வருகின்றன.

இந்த மோசடியில் புதுவகையாக, பிரபலமான எம்எல்ஏ.க்கள் பெயரில், தொழிலதிபர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது. கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் பெயரிலும் இது போல மோசடி நடந்துள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ. புகார்: இது தொடர்பாக, கோவை சைபர் க்ரைமில் அவர் அளித்த புகாரில், தன் பெயரைப் பயன்படுத்தி, கட்சி நிதி வேண்டும் என தொழில் அதிபர்களிடம், மர்மநபர் பணம் பறிப்பதாக அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். மேலும், 9443872571 என்ற செல்போன் எண்ணை பயன்படுத்தி அந்த நபர் மோசடி செய்ததாக புகாரில் எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், எம்.எல்.ஏ. ஒருவரின் பெயரைச் சொல்லி நன்கொடை கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த தொழிலதிபர், எம்.எல்.ஏ.வைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பணம் கேட்கவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொழிலதிபர் ஈரோடு சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.

திருச்சியில் கைது: இது தொடர்பாக ஈரோடு சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட அந்த எண் (9443872571), ‘மாஸ் மீடியா’ என்ற பெயரில் செயல்படும், பண பரிவர்த்தனை செய்யும் மையத்தின் எண் எனத் தெரியவந்தது.

மொபைல் எண்ணை மோசடிக்கு பயன்படுத்தியவர், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார் பகுதியைச் சேர்ந்த ரவி (63) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, திருச்சியில் பதுங்கி இருந்த ரவியை, ஈரோடு சைபர் க்ரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 3 சிம்கார்டுகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் அடங்கிய புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ரவி, ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களுக்கு போன் செய்து எம்.எல்.ஏ. பேசுவதாக கூறி ஆள்மாறாட்டம் செய்து பணம் பறித்துள்ளார். இவர் மீது, இதுவரை ஈரோடு சைபர்கிரைமில் 3 புகார்கள் பதிவாகி உள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஆன்லைனில் வர்த்தகம், வேலைவாய்ப்பு, கடன் தருவது, கிரடிட் கார்டு லிமிட்டை அதிகப்படுத்தித் தருவது, பேன் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை வங்கி கணக்கில் சேர்ப்பது, தனது பெயரில் தவறான பார்சல் அனுப்பியிருப்பது, வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பிப்பது, போலியான கஸ்டமர் கேர் எண்ணுக்கு கால் செய்வது, மலிவு விலையில் பொருள்கள் ஆன்லைனில் விற்பனை, போன்ற எந்தவகையிலான சைபர் க்ரைம் குற்றங்களிலும் பொதுமக்கள் பணத்தை இழக்காமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மேலும், சமூக வலைதளங்களில் ‘கிவ் அப்’ போன்று வரும், ‘லிங்கை’ கிளிக் செய்து ‘யூசர் ஐடி, பாஸ்வேர்ட்’ ஆகியவற்றை பகிர்வது, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அனைவரும் பார்க்கும்படி
பொதுவாக பகிர்வது போன்ற செயல்களை செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு சைபர் க்ரைம் ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால், உடனடியாகவோ அல்லது 24 மணிநேரத்திற்குள்ளாகவோ விரைவாக சைபர் க்ரைம் உதவி எண்.1930 என்ற எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x