Published : 15 Apr 2024 06:15 AM
Last Updated : 15 Apr 2024 06:15 AM

சென்னையில் மருத்துவ மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற உ.பி. இளைஞர்கள் 2 பேர் கைது

மருத்துவ மாணவரை சென்னை சென்ட்ரலில் துப்பாக்கியால் சுட முயன்றதாக கைது செய்யப்பட்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரித்திக்குமார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி.

சென்னை: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர், சென்னையில் மருத்துவ மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகன். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் கல்லூரி எதிரே உள்ள ஒரு டீ கடையில் நேற்று முன்தினம் இரவு டீ குடித்துக் கொண்டிருந்தார்.

இரு இளைஞர்கள் வாக்குவாதம்: அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் ரோகனை இந்தியில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிஒன்றை எடுத்து ரோகன் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத ரோகன் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் துப்பாக்கி வைத்திருந்த இருவரையும் பிடிக்க ஓடி வந்தனர். உடனே இருவரும், அங்கிருந்து தப்பியோடினர். இருப்பினும் பொதுமக்கள் விரட்டிச் சென்று அதில் ஒருவரை பிடித்து பூக்கடை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர் உத்தர பிரதேச மாநிலம் மான்பூர் மாவட்டம் இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த கஜராஜ் பிரதாப் பால் என்றரித்திக்குமார் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் ரயிலில் தப்பிய அவரது உறவினர் உ.பி. காசியாபாத்தைச் சேர்ந்த அமித்குமாரை விஜயவாடா ரயில் நிலையத்தில் அந்தமாநில போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை அழைத்து வரப்பட்டார்.

முன்னதாக துப்பாக்கியால் சுட முயன்றது ஏன் என்பது குறித்து தெரிவித்ததாவது: அமித் குமார் அவருடன் உத்தர பிரதேசத்தில் பள்ளியில் ஒற்றாக படித்த பெண்ணை 7-ம் வகுப்பு முதல் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியும் அவரிடம் நட்பாக பழகியுள்ளார். தற்போது அந்த மாணவி முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புக்காக சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சக மாணவரான ரோகனுடன் பழகியுள்ளார்.

இதுகுறித்த வாட்ஸ்அப் ஸ்டேடஸ் படங்களைப் பார்த்து அமித்குமார் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் அவருடன் இருந்த தொடர்பையும் அந்த மாணவி துண்டித்ததாக தெரிகிறது.

உ.பி.யில் வாங்கிய கள்ளத் துப்பாக்கி: இதையடுத்து அமித்குமாருக்கு ஆதரவாக உறவினரான ரித்திக்குமாரும் சேர்ந்து ரோகனை மிரட்டி, அந்த மாணவியைவிட்டு விலக செய்ய திட்டமிட்டனர். இதற்காக கள்ளத் துப்பாக்கி ஒன்றை உத்தர பிரதேசத்திலேயே வாங்கியுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் சென்னை வந்து, ரோகனை பின் தொடர்ந்த நிலையில், நேற்று துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். இதனை ரித்திக்குமார் வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x