Published : 12 Apr 2024 06:15 AM
Last Updated : 12 Apr 2024 06:15 AM

படப்பை ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளை

படப்பை: தாம்பரம் அருகே படப்பை வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் சவுத் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. அருகிலேயே அதன் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த ஏடிஎம்முக்கு பணம் நிரப்பும் ஊழியர்கள் கடந்த 6-ம் தேதி மாலையில் வங்கி ஏடிஎம்மில் ரூ. 23 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தை நிரப்பி உள்ளனர். இதே போல் பணம் நிரப்பிய பின்பு வழக்கமாக நான்குஐந்து நாட்களுக்கு பின்பு தான்மீண்டும் வந்து பணம் நிரப்புவார்கள்.

இந்நிலையில் ஏடிஎம் மில் பணம் நிரப்பிய பின்பு அடுத்த இரண்டு நாட்களில் வாடிக்கையாளர்கள் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை. அனைவரும் ஏடிஎம்மில் பணம் இல்லை என்ற தகவலை வங்கியில் தெரிவித்துள்ளனர். இதனால் வங்கி அதிகாரிகள் ஏடிஎம்மை ஆய்வு செய்தபோது வாடிக்கையாளர்கள் பணம்எடுக்க முடியாதபடி ஏடிஎம் நம்பர்லாக் செய்யப்பட்டுள்ளது என்பதைகண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து வங்கியின் உயர் அதிகாரிகள் ஏடிஎம் நிபுணர்களை வரவழைத்து ஏடிஎம்மில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏடிஎம்முக்கு நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் வந்த நான்கு நபர்கள் ஏடிஎம்மை நம்பர் லாக் செய்ததை கண்டுபிடித்தனர்.

அதோடு அல்லாமல் அதே காரில் வந்த மர்ம நபர்கள் ஏடிஎம்மில் பணம் நிரப்பிய அடுத்த இரு தினங்களில் ரகசிய பின் நம்பர் சிஸ்டத்தை உபயோகித்து, முதல் நாளில் ரூ. 8 லட்சத்து 17ஆயிரத்து 200, மறுநாளில் காலை 9:40 மணிக்கு ரூ.4,86,000 எனமொத்தம் ரூ. 13 லட்சத்து 3 ஆயிரத்து 200-ஐ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனிப்படை விசாரணை: புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தனிப்படை அமைத்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த ஏடிஎம் பணம் கொள்ளையில் ஈடுபட்டுள்ள மர்மநபர்கள் வங்கியின் ரகசிய கோடுநம்பர் மற்றும் பின் எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டுஅவற்றைப் பயன்படுத்தி இந்தசம்பவம் நடந்துள்ளதால் வங்கியோடு தொடர்புடையவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேபோல் பல்லாவரத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் ரூ. 8 லட்சம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x