Published : 08 Apr 2024 04:18 PM
Last Updated : 08 Apr 2024 04:18 PM

ஸ்ரீவில்லி. அருகே தரைப்பாலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு; 19 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக தரைப் பாலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டது. இரவு 11 மணி அளவில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஶ்ரீவில்லிபுத்தூர் - கிருஷ்ணன்கோவில் இடையே தனியார் கல்லூரி அருகே பாலம் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டு உள்ள தரைப்பாலத்தில் சென்ற போது, ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

அப்போது தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு, வந்த புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்தில் கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறையை சேர்ந்த மாரியப்பன் மனைவி முத்துசெல்வி (47), தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியை சேர்ந்த குமார் மகன் கார்த்திக் (20) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோயம்பத்தூர் மாவட்ட வால்பாறையை சேர்ந்த பரமசிவம் மனைவி பொன்லட்சுமி, மாடசாமி மகன் தங்கராஜ் (55), கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி மகேஸ்வரி (37), செம்பட்டி காலனியை சேர்ந்த கண்ணன் மனைவி சித்ரா (33), பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் மனைவி காளீஸ்வரி(34), பாலக்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் ஜெயபிரகாஷ் (41), தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் மாரியப்பன் (53), ஆகிய 7 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

லேசான காயமடைந்த கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை மாரியப்பன் மகன் ஆகாஷ்(23), பிரபு மனைவி காளியம்மாள் (45), கோயம்புத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி லட்சுமி (44), பொள்ளாச்சி முத்துசாமி மகன் வெள்ளியங்கிரி (45), அவரது மனைவி சித்ரா (43), ராஜபாளையம் சண்முகசுந்தரம் மகன் ஜெயந்த் (33), கருப்பசாமி மகன் கணேஷ் (28), தென்காசி மாவட்டம் வீராணம் ராஜகனி மகன் விக்னேஸ்வரன்(33), கீழப்புலியூர் முருகேசன் மகன் லட்சுமிபதி (20), கடையநல்லூர் சசிகுமார் மகன் பாலாஜி (20), குருமனைபேரி மாதவன் மகன் ராஜாராம் (26), தென்காசி முகமது அலி ஜின்னா மகன் அஸ்கர் அலி (21) ஆகிய 12 பேர் ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து காரணமாக மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார். விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x