Published : 08 Apr 2024 06:20 AM
Last Updated : 08 Apr 2024 06:20 AM

சென்னை | ஓட்டிப் பார்த்து வாங்குவதாக கூறி வாகனத்துடன் ஓட்டம்: பிரபல கொள்ளையன் கைது

சென்னை: மகள் பிறந்தநாளுக்கு இருசக்கர வாகனம் பரிசளிக்க வேண்டும் எனக் கூறி, ஷோரூம் சென்று வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதுபோல் அதை திருடிச் சென்றதாக பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை போரூர், ஆற்காடு சாலை பகுதியில் வசிப்பவர் அலெக்சாண்டர் (41). போரூர், ஆற்காடு சாலையிலுள்ள இருசக்கர வாகன ஷோரூமில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 3-ம் தேதி ஒரு நபர் அலெக்சாண்டர் பணிபுரியும் ஷோரூமுக்கு வந்து, அவரிடம் தனது மகளின் பிறந்த நாளுக்கு பரிசளிக்க புதிய இருசக்கர வாகனம் வேண்டும் என்று கேட்டு, ஒரு இருசக்கர வாகனத்தை தேர்வு செய்து, அதனை ஓட்டி பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அலெக்சாண்டர், கடை ஊழியர் அன்புராஜ் என்பவரிடம் அந்த புதிய இருசக்கர வாகனத்தை கொடுத்தனுப்பி, அந்த நபருடன் ஓட்டி பார்க்க கூறினார். அன்புராஜ், அந்த நபரை அழைத்துக் கொண்டு அதே பகுதி பிருந்தாவன் நகருக்கு சென்று, அங்கு அந்த நபரிடம் புதிய இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பார்க்கக் கொடுத்தார்.

புதிய இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அந்த நபர் திரும்பவரவில்லை. அதன் பிறகே இருசக்கர வாகனம் நூதன முறையில் திருடப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அலெக்சாண்டர் இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்துவிசாரித்தனர். வாகனத்தை திருடிச்சென்றது கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்த சிவகுமார் (43) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல 2021-ம்ஆண்டு,வளசரவாக்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு நகைக்கடையில் கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி 4.5 சவரன் தங்க நகைகளை சிவகுமார் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

மேலும், அவர் வடபழனி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் உள்ளார். அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி, 8 திருட்டு வழக்குகள், 5 மோசடி வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்டகுற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x