Published : 15 Mar 2024 06:31 AM
Last Updated : 15 Mar 2024 06:31 AM

திருமங்கலம் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீசி மருது சேனை அமைப்பு தலைவரை கொல்ல முயற்சி

மருது சேனை அமைப்பின் தலைவரை கொல்ல முயன்றதைக் கண்டித்து, விருதுநகர்-கள்ளிக்குடிசாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர். (உள் படம்) ஆதிநாராயணன்.

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே மருது சேனை அமைப்பின் தலைவரான ஆதிநாராயணன் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் அருகில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). இவர் மருது சேனை என்ற அமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிட்டார்.

இவரது அலுவலகம் கள்ளிக்குடி- கல்லுப்பட்டி சாலையில் உள்ளது. நேற்று நண்பகல் 12 மணி அளவில் தனது அலுவலகத்திலிருந்து கள்ளிக்குடி-விருதுநகர் நான்குவழிச் சாலையில் உள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது, மையிட்டான்பட்டிக்குள் நுழையும் பகுதியில், எதிர் திசையிலிருந்து வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. பின்னர், அந்தக் காரில் வந்த கும்பல், ஆதிநாராயணன் கார் மீது பெட்ரோல் குண்டை வீசியது. எனினும், கார் மீது வெடிகுண்டு விழவில்லை. மீண்டும் மற்றொரு பெட்ரோல் குண்டை வீசியதில், ஆதிநாராயணனின் காரின் முன்பகுதி வெடித்து தீப்பற்றியது.

சாமர்த்தியமாக... உடனே, ஆதிநாராயணனின் கார் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு, சாலையோர பள்ளத்தில் காரை இறக்கி, சாமர்த்தியமாக தப்பித்துள்ளார். இதையடுத்து, அந்தக் கும்பல் விருதுநகர் நோக்கி காரில் தப்பிச் சென்றது.

ஆதரவாளர்கள் சாலை மறியல்: இதுகுறித்து தகவலறிந்த கள்ளிக்குடி காவல் ஆய்வாளர் லட்சுமி லதா மற்றும் போலீஸார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர். மேலும்,கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஆதிநாராயணன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்த அறிந்த மருது சேனை அமைப்பினர் உள்ளிட்டோர், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கள்ளிக்குடி-விருதுநகர் நான்குவழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஆதிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``ஏற்கெனவே எங்களது அமைப்பின் பொருளாளரை கொலை செய்த ஞானசேகரின் ஆதரவாளர்கள் மூலம் என்னையும் கொலை செய்யும் நோக்கில், எனது கார் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். கார் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினேன். காவல் துறையினர் இச்சம்பவத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யாவிட்டால், போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x