Published : 06 Mar 2024 06:05 AM
Last Updated : 06 Mar 2024 06:05 AM

சென்னை | ஆட்டோவில் பயணிகளிடம் வழிப்பறி; அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது - 44 செல்போன்கள் பறிமுதல்

சென்னை: சென்னை, கொண்டித்தோப்பு, சபாபதி 2-வது தெருவில் வசித்து வருபவர் மகேந்திர குமார் பட்டேல்(45). இவர் கடந்தமாதம் 28-ம் தேதி, வால்டாக்ஸ் சாலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் இருந்த ஒரு பெண் உட்பட 2 பேர் மகேந்திரகுமாரிடம் பேச்சுகொடுத்தனர். திடீரென, நீங்கள் கூறிய இடத்துக்கு ஆட்டோசெல்லாது எனக்கூறி அவரை பாதி வழியில் இறக்கிவிட்டனர்.

கீழே இறங்கிய மகேந்திரகுமார் சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த ஐபோன் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்படி, துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி, மணலி சாஸ்திரி நகர் ரமேஷ்(31), அவரது தம்பி பெருமாள் (24) மற்றும் தண்டையார்பேட்டை அமீன்(31), தினேஷ்(31) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட ரமேஷ், அவரது தம்பி பெருமாள் மற்றும் அவர்களது தாயாருடன் ஷேர் ஆட்டோவில் செல்வதும், வழியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, சகோதரர்களில் ஒருவர் ஆட்டோ ஓட்ட, மற்ற இருவரும் புதிதாக ஏறிய நபரிடம்பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரது கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடமிருந்து செல்போன், பணம் மற்றும் விலைஉயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு, அந்த நபர்களைபாதியில் இறக்கிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

திருடிய செல்போன் உள்ளிட்ட பொருட்களை அமீன் மற்றும் தினேஷ் ஆகியோரிடம் விற்று வந்ததும், தெரியவந்தது. அதன்பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 44 செல்போன்கள், 2 டேப், இருசக்கர வாகனம்மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான சகோதரர்களின் தாயாரிடமும் போலீஸார் விசாரணைமேற்கொண்டனர். அவரது உடல் மிகவும் பலவீனமாக உள்ளதால் இதுவரை அவரை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x