

ஈரோடு: சென்னை அருகே திமுக பிரமுகர் கொலையான சம்பவம் தொடர்பாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 5 பேர் சரணடைந்தனர்.
சென்னை வண்டலூர் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆராமுதன் (56). இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகில் காரில் சென்றபோது, நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ஒரு கும்பல், தப்பி ஓட முயன்ற ஆராமுதனை அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக, வண்டலூர் ஓட்டேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உமாதேவி முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (22), மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த சத்தியசீலன் (20), திருப்பூர் மாவட்டம், அவினாசி, ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் (20), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (20) மற்றும் 17 வயதுள்ள ஒருவர் என மொத்தம் 5 பேர் சரணடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி 4 பேர் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயதான ஒருவர், செங்கல்பட்டு இளம் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டார்.