

வண்டலூர்: வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் ஆராமுதன் (55). இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராகவும், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவராகவும் உள்ளார். இவரின் அலுவலகம் வண்டலூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ளது. இவர்நேற்றிரவு தன்னுடைய அலுவலகம் முன்பு நின்று கொண்டு கட்சியினருடன் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் திடீரென ஆராமுதனை வெட்டியது. இதில் அவர் கை துண்டானது. அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஆராமுதனை அந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுவீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இதில் அந்த இடத்திலேயே ஆராமுதன் உயிரிழந்தார். தகவல் அறிந்த திமுகவினர் அந்த இடத்தில் குவிந்ததால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வண்டலூர் ஓட்டேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.