Published : 21 Feb 2024 07:30 AM
Last Updated : 21 Feb 2024 07:30 AM

ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது: ரூ.65 லட்சம் ரொக்கம் 3.64 கிலோ தங்கம் பறிமுதல்

ஜகஜோதி

ஹைதராபாத்: தெலங்கானாவில் கங்காதர் எனும் ஒப்பந்ததாரர் அரசு கட்டுமான பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் பழங்குடியினர் நலவாரியத் துறை சார்பில் நிஜாமாபாத்தில் ஆண்கள் அரசு விடுதியை கட்டி முடித்துள்ளார்.

மேலும் இவர் புதிதாக ஹைதராபாத்தில் உள்ள காஜுல ராமாரம் பகுதியில் புதிதாக கட்டப்பட வேண்டிய பழங்குடியினர் பிரிவினருக்கான அரசு விடுதி கட்டும் ஒப்பந்தத்தையும் எடுத்துள்ளார். இந்நிலையில், ஏற்கெனவே கட்டி முடித்த பணிக்கான நிலுவை தொகையை வழங்குமாறு, ஹைதராபாத் எஸ்டி நலப்பிரிவு வாரியத்தில் செயற்பொறியாளராக உள்ள ஜகஜோதியிடம் கங்காதர் கேட்டார். அதற்கு அவர் 2 டெண்டர்களை எடுத்துள்ளீர்கள் என்பதால் ரூ.1 லட்சம் கொடுத்தால் பில் தொகையை வழங்குவேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் கங்காதர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை, பணத்துடன் கங்காதர் பழங்குடி நலவாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த அதிகாரி ஜகஜோதியிடம் ரூ.1 லட்சத்தில் சற்று குறைக்கும் படி கேட்டுள்ளார். பேரம் பேசி இறுதியாக ரூ. 84 ஆயிரம் வழங்குமாறு ஜகஜோதி கூறியுள்ளார். அப்பணத்தை கங்காதரிடம் இருந்து ஜகஜோதி பெற்றுக்கொண்டார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஜகஜோதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதன்பின் ஜகஜோதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத ரூ.65 லட்சம் ரொக்கம், 3.64 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், சில சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜகஜோதிக்கு ரூ.15 கோடி சொத்துகள் உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. லட்ச கணக்கில் பணம், நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததும், ஜகஜோதி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனே அவரை ஹைதராபாத் உஸ்மானியா அரசுமருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் ஜகஜோதிலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இன்று காலைஅவரை ஹைதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x