Published : 16 Nov 2023 08:40 PM
Last Updated : 16 Nov 2023 08:40 PM

தாராபுரம் அருகே கார் - டேங்கர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: தாராபுரம் அருகே காரும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு பகுதியில், திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் பாலகிருஷ்ணன் (65), செல்வி (64), தமிழ்மணி (30), சித்ரா (28), கலாராணி (55) மற்றும் தில்லை அரசி (52) ஆகியோர், தாராபுரம் நோக்கி இன்று மதியம் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கோவையில் இருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி பழநிக்கு சென்று கொண்டிருருந்தது. டேங்கர் லாரியும், காரும் மணக்கடவு பகுதியில் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அலங்கியம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரின் முன்பக்கம் முழுமையாக சுக்குநூறாக நொறுங்கியதால், காரில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்து உயிரிழந்திருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதில் தமிழ்மணி என்பவர் காரை ஓட்டி உள்ளார். இவர்கள் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் தாராபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதல்வர் நிதியுதவி அறிவிப்பு: இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், ஆலங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில் இன்று (16.11.2023) மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வானமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாராபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி செல்வி (வயது 50), கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், வஞ்சியம்மா நகரைச் சேர்ந்த தமிழ்மணி (வயது 50), அவரது மனைவி சித்ரா (வயது 45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கலாராணி (வயது 55) என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x