Last Updated : 19 Oct, 2023 08:20 PM

 

Published : 19 Oct 2023 08:20 PM
Last Updated : 19 Oct 2023 08:20 PM

நியோ மேக்ஸ் முதல் பிரணவ் வரை - மதுரையில் அதிகரிக்கும் பணமோசடியால் பரிதவிக்கும் பொதுமக்கள்!

மதுரை: பெரும்பாலும் உழைப்பின்றி, குறுக்கு வழியில் பொருளாதாரத்தை பெருக்கிட முடியுமா என்றே பலர் ஆளாய் பறக்கின்றனர். இது போன்றவர்கள் ஏதாவது போலி விளம்பரம், பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி அதிக லாபம் சம்பாதிக்கும் நம்பிக்கையில் அங்கீகார மற்ற சீட்டு கம்பெனி, தனியார் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம், நகைக்கடைகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாறுவது அடிக்கடி அரங்கேறுகிறது. ஏமாற்றுவதில் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் திட்ட மிட்டு செயல்படும் கும்பல்கள் பற்றி ஏமாறும் அப்பாவி மக்களுக்கு முதலில் தெரிவதில்லை.

ஏமாந்த பிறகு காவல் நிலையம், நீதிமன்றங்களை நாடும் போது, உரிய நேரத்தில் இழந்த பணத்துக்கு நிவாரணமும் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். வேறு வழியின்றி பணம் போனாலும் போகட்டும் என்ற விரக்தியில் சிலர் ஒதுங்குகின்றனர். இன்னும், சிலர் காவல் துறை, நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இழந்த பணத்தை பெற ஆண்டுக்கணக்கில் போராடுகின்றனர். குறிப்பாக, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சமீப காலமாக தனியார் நிதி நிறுவன முறைகேடு, திருக்குறள் புத்தகம் விற்பனை போன்ற தனியார் நிதி நிறுவனங்களை நம்பி முதலீடுகளை செய்து ஏமாந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

இது குறித்த ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதத்துக்கு முன்பு, "நியோ- மேக்" என்ற ரியல் எஸ்டேட் நிறுவனமும், அது சார்ந்த துணை நிறுவனங்களும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோரிடம் பல கோடி பணம் வசூலித்து முறைகேடு செய்திருப்பதாக மதுரை பொருளாதார குற்றத் தடுப்பில், அந்த நிறுவனங்கள் சார்ந்த இயக்குநர்கள், முகவர்கள் என 90-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் 13 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி மணிஷா தலைமையில் சிறப்பு போலீஸ் குழு தொடர்ந்து விசாரிக்கின்றது. இருப்பினும்,அந்நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்து, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவது என்பது தொடர் நடவடிக்கை என்ற நிலையில், மதுரையில் மேலும், ஒரு மோசடி சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மதுரை மேலமாசி வீதியில் சில மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட, "பிரணவ் ஜூவல்லர்ஸ்" என்ற நிறுவனம், தங்களிடம் நகை, பணம் முதலீடு செய்வோருக்கு செய்கூலி, சேதாரமின்றி கூடுதல் நகையுடன் புதிய நகைகள் வழங்கும் என, ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, முதலீடுகளை கவர்ந்து முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது

ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்தவர்கள் தங்களுக்கான முதிர்வு காலம் வந்தபின், புதிய நகைகளை வாங்கச் சென்றபோது, நகைக் கடையை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. இக்கடை மூலம் பாதிக்கப்பட்ட இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இழந்த பணத்திற்காக காவல் நிலையங்களுக்கு அலைகின்றனர்.

உதாரணத்துக்கு, இவ்விரு நிகழ்வை சொன்னாலும், மதுரையில் மேலும், தனியார் சீட்டு கம்பெனி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவது, பெண்கள் குழு முறைகேடு போன்ற பல்வேறு நிலையில் பொருளாதார குற்ற மோசடி புகார்கள் மதுரை நகர், மாவட்ட குற்றப்பிரிவு, பொருளாதார குற்றத் தடுப்பு காவல் நிலையங்களில் அதிகரிக்கின்றனர். இவற்றைத் தடுக்க, போலீஸார் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், ஏமாந்த பிறகே பொதுமக்களும் உணருகின்றனர். கூடுதல் வட்டிக்காக அங்கீகார மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்து மக்கள் ஏமாறுவதை தடுக்க, காவல் துறையினர் அறிவுறுத்தினாலும், தொடர் பிரச்சார இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஏமாறுவோர் மாற வேண்டும் - காவல் துறை அறிவுறுத்தல்: இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியது: "அதிக லாபம் கிடைக்கும் என நம்பி முதலீட்டாளர்கள் ஏமாறுகின்றனர். தமிழகத்தில் தான் பொருளாதார குற்றங்களுக்கு சட்டம் ஏற்படுத்தி, தனி காவல் துறை பிரிவு செய்படுகிறது. சீட்டு, நகைக் கடை போன்ற கம்பெனிகளில் பண மோசடியில் ஏமாறுவோருக்கு இ.பி.கோ 406, 420 என ஏற்கெனவே இருந்த சட்டம் போதாது என, "1997ல் தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டம்" கொண்டு வரப்பட்டது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலில் அதிக பட்ச வட்டி தர முடியாது. கூடுதல் வட்டி தருவதாக கூறும் நிறுவனங்களிடம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குறைந்த காலத்தில் அதிக லாபம் என்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, உழைத்த பணத்தை முதலீடு செய்யும் முன்பு, அது, பதிவு செய்த நிறுவனமா என, உறுதிப்படுத்த வேண்டும். "திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே தான் இருக்கிறது. சட்டம் போட்டு தடுக்கும் கூட்டமும் தடுத்துக்கொண்டுள்ளது. ஆனாலும், ஏமாறும் மக்கள் மாற வேண்டும். "மனிதனின் தேவையை உலகம் நிறை வேற்றும், பேராசையை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது" என்ற காந்தியின் சொற்களை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x