Last Updated : 26 Sep, 2023 05:23 PM

 

Published : 26 Sep 2023 05:23 PM
Last Updated : 26 Sep 2023 05:23 PM

முதலீடு செய்த பணம் கைக்கு கிடைக்குமா? - இரு தலைக்கொல்லி எறும்பாக நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள்

மதுரை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகாரில் சிக்கியது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோரை காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிர்வாக இயக்குநர் கமலக்கண்ணன், அவரது சகோதரர் சிங்கார வேலன் ஆகியோர் சென்னையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

நியோ-மேக்ஸ் விவகாரத்தில் முதலீட்டாளர் களுக்குப் பணம் மற்றும் நிலம் வழங்கு வதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரி நிறுவன இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகி யோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். எங்கள் மீது புகார் அளித்தோருக்கு நிலங்களை வழங்கி பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறோம். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அரசுத் தரப்பில், விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. இந்த நேரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பது தேவையற்றது என எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நியோ-மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோரின் முழுப் பட்டியலையும் நியோ-மேக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பட்டியல் தாக்கல் செய்யப்படும்போது யார், யார் எவ்வளவு முதலீடு செய்துள்ளனர் என்ற விவரம் தெரிய வரும்.

இதுகுறித்து முதலீட்டாளர்கள் கூறியதாவது: இயக்குநர்கள் சில நபர்களை வைத்து முதலீட்டாளர்களைப் புகார் கொடுக்க விடாமல் தடுக்கும் நிலை உள்ளது. மதுரை, விருதுநகரில் புகார் மனுக்கள் பெறும் மேளா நடத்தியும் எங்களில் பலர் புகார் அளிக்க தயங்குகின்றனர். முகவர்கள், முதலீட்டாளர்களைத் தொடர்புகொண்டு ரகசியமாக பேரம் பேசுகின்றனர். ‘‘நீங்கள் போலீஸில் புகார் கொடுத்தால் பணம் கிடைக்க நீண்ட நாட் களாகும்.

நம்பிக்கை இல்லை எனில் செலுத்திய தொகையை மட்டும் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை காத்திருந்தால் நிறுவனம் கூறியபடி, கூடுதல் இரட்டிப்புத் தொகை கிடைக்கும். முடிவு உங்களது கையில்தான் இருக்கிறது’’ என மிரட்டும் தொனியோடு, அதேநேரத்தில் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கிய வட்டித் தொகையை அசலில் கழித்துக் கொண்டு எஞ்சிய முதலீட்டுத் தொகையை வழங்கலாம் என்ற திட்டத்திலும் முகவர்கள் பலர் செயல்படுகின்றனர், என்றனர்.

போலீஸார் கூறுகையில், ‘இது வரையிலும் 552-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் புகார் மனு அளித்துள் ளனர். நியோ-மேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகள், வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்டோருக்கு உரிய தொகையைப் பெற்றுத் தரவே நடவடிக்கை எடுக்கிறோம். இதற்கு முதலீட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றனர். காவல் துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் முகவர்கள் மூலமாக முதலீட்டாளர்களிடம் பேரம் பேசுகின்றனர்.

இதனால், முடிவெடுக்க முடியாமல் இரு தலைக் கொல்லி எறும்பாக முதலீட்டாளர்கள் உள்ளனர். நீதிமன்றம் உறுதியான, அதேநேரத்தில் முதலீட்டாளர்களுக்கு விரைந்து பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்த முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x