Published : 22 Sep 2023 06:24 AM
Last Updated : 22 Sep 2023 06:24 AM

வீட்டில் ஸ்கேன் இயந்திரங்கள் அமைத்து கருவின் பாலினம் கண்டறிந்த செவிலியர் உட்பட 5 பேர் கைது

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சட்ட விரோதமாக, கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த செவிலியர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீஸார் மற்றும் மருத்துவ நலப்பணித் துறை அதிகாரிகள்.

தருமபுரி: தருமபுரி அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த செவிலியர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த செம்மண்குழி மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் கருவி மூலம் கண்டறிந்து சிலர் தெரிவிப்பதாக மருத்துவ நலப்பணிகள் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மருத்துவக் குழுவினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது தகவல் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தருமபுரி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான குழுவினர் அந்த வீட்டில்அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கர்ப்பிணிகள் சிலர் கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் அறிய அங்கேகாத்திருந்தது தெரிய வந்தது.

தருமபுரி இலக்கியம்பட்டி அடுத்த அழகாபுரி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (45), அவரதுமனைவி கற்பகம் (38) ஆகியோர் தலைமையில் இந்த சட்ட விரோதசெயல்பாடு நடந்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே, செவிலியரான கற்பகம், வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28), தரகர் சிலம்பரசன் (37), கார் ஓட்டுநர் செல்வராஜ், ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஆகிய 5 பேரை பிடித்த இந்தக் குழுவினர் காரிமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் 5 பேரையும் கைதுசெய்ததுடன், 4 ஸ்கேன் இயந்திரங்கள், 2 கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே கைதானவர்: கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் இதேபோன்று கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தது தொடர்பாக செவிலியர் கற்பகம் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தவர் வேறு இடத்தில் அதே தொழிலை செய்த நிலையில் மீண்டும் தற்போது கைதாகி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x