Published : 14 Sep 2023 03:22 PM
Last Updated : 14 Sep 2023 03:22 PM

திருப்பூர் - கோவில்வழியில் தொடரும் கொள்ளை: ரோந்துப் பணிகளில் போலீஸ் சுணக்கம் காட்டுவதாக புகார்

திருப்பூர் கோயில்வழி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள். படம்: இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாநகரின் 60-வது வார்டு கோவில்வழி. தென் மாவட்டங்கள் செல்வதற்கான பேருந்து நிலையம் இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் பலரும் இந்த பகுதியில் குடியேறி வருகின்றனர்.

இப்பகுதியில் அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளருமான பரமசிவம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி பதிவில் கூறியிருப்பதாவது:

கோவில்வழி பகுதியை சுற்றியுள்ள முத்தணம்பாளையம், பிள்ளையார் நகர் மேற்கு, சேரன் நகர் ஆகிய 3 பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீபகாலமாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சேரன் நகர் 2-வது வீதியில் ஈஸ்வரன் - ராணி தம்பதி வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு,

சண்முகம் - சண்முகப் பிரியா தம்பதி வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் எட்டரை பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு, ஜெயராஜ் - மாலதி தம்பதி வீட்டில் கடந்த ஆண்டு இறுதியில் 3 பவுன் தங்க நகை, வெள்ளி, ரொக்கம் திருட்டு என இப்பகுதிகளில் அரங்கேறிய திருட்டு சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த வழக்கு தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, பல மாதங்களாகியும் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நடுத்தர குடும்பத்தினர் சிறுக சிறுக சேமித்து, நகையை வாங்கி வீட்டில் வைத்தால், அவற்றுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.

மாநகர போலீஸார் தொடர்ந்து எங்கள் பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினால் மட்டுமே திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும். எங்கள் பகுதியில் போதிய தெருவிளக்குகளும் இல்லாததால், குற்றச்செயல்கள் அரங்கேற ஏதுவாக அமைந்து விடுகிறது. பொதுமக்களின் தேவை கருதி போதிய தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும், என கூறியுள்ளார்.

இது தொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபுவிடம் கேட்டபோது, “கோவில் வழியில் போதிய சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாத நிலை உள்ளது. அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க குடியிருப்பு வாசிகளிடம் பேசி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x