Published : 14 Sep 2023 02:55 PM
Last Updated : 14 Sep 2023 02:55 PM

நாமக்கல் அருகே தாபா ஓட்டல் உரிமையாளரின் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, ரூ.9 லட்சம் திருட்டு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குப்புச்சிபாளையத்தில் நகை மற்றும் பணம் திருடுபோன வீட்டில் விசாரணை நடத்திய ஏடிஎஸ்பி ராஜூ

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே தாபா ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் பணத்தைத் திருடி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் அப்பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் நிஷாந்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று காலை கந்தசாமி தனது மனைவி கலைச் செல்வி (45) உள்ளிட்ட குடும்பத்தினருடன் ஜவுளி எடுக்க ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

வீட்டில் கந்தசாமியின் தாயார் அருக்காணி மட்டும் இருந்தார். கந்தசாமி சென்ற சிறிது நேரத்தில் மற்றொரு காரில் இரு மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். இருவரும் அங்கிருந்த அருக்காணியிடம், “கந்தசாமி தங்களை வேலைக்கு வரச் சொல்லியதாக” தெரிவித்துள்ளனர். அதற்கு அருக்காணி, “வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் சென்றுள்ளனர். நாளை வாருங்கள்’ என்றார். பின்னர் அவர் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, திருமணத்துக்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை, ரூ.9 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

தகவல் அறிந்த அங்கு வந்த ஏடிஎஸ்பி ராஜூ, டிஎஸ்பி ராஜமுரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் குற்றவாளிகளின் தடயங்களை பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நகை மற்றும் பணத்தைத் திருடி சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x