Published : 13 Aug 2023 10:06 AM
Last Updated : 13 Aug 2023 10:06 AM

மின் கட்டணம் செலுத்தவில்லை என எஸ்எம்எஸ் - பாடகி சின்மயி உறவினரிடம் ரூ.5.83 லட்சம் மோசடி

பாடகி சின்மயி | கோப்புப் படம்

சென்னை: மின் கட்டணம் செலுத்தவில்லை என செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, பாடகி சின்மயி உறவினரிடம் நூதன முறையில் ரூ.5.83 லட்சத்தை மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.

சென்னை அபிராமபுரம், டாக்டர் ரங்கா சாலையில் வசிக்கும் பாடகி சின்மயி உறவினரின் செல்போனுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என குறுஞ்செய்தி அனுப்பி லட்சக் கணக்கான பணத்தை மர்ம நபர்கள் அபகரித்துள்ளனர். இது குறித்து அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது செல்போனுக்கு கடந்த 11-ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியம் எனக் குறிப்பிட்டு குறுஞ் செய்தி ஒன்று வந்தது. அதில், நான் மின் கட்டணம் இன்னும் செலுத்தவில்லை என்றும், உடனடியாக மின் கட்டணம் செலுத்தவில்லையென்றால், மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், அத்துடன், ஒரு செல்போன் எண் அனுப்பப்பட்டிருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, எனது மின்சார பயனீட்டாளர் எண் மற்றும் ஒரு லிங்க் அனுப்பி அதன் மூலம் 10 ரூபாய் பணம் செலுத்தி உறுதிபடுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார். அப்போது, எனது எஸ்பிஐ ஏடிஎம் கார்டு மூலம் 10 ரூபாய் செலுத்த முயன்றபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் செலுத்த இயலவில்லை.

இது பற்றி லிங்க் அனுப்பியவரிடம் கூறியபோது, அந்த நபர் வேறொரு கார்ட் மூலம் பணம் செலுத்துமாறு கூறினார். அவ்வாறு எனது விவரங்கள் குறித்து 1 மணி நேரம் என்னிடம் பேசினார். அப்போது, எனது வங்கி கணக்கில் இருந்த பணம் ரூ.4,98,000-ம் அதனை தொடர்ந்து மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.85,000-ம் அடுத்தடுத்து எடுக்கப்பட்டுவிட்டது. பணம் முழுவதும் எடுக்கப்பட்டதும் அவர் எனது அழைப்பை துண்டித்து விட்டார். எனவே, எனது பணத்தை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி சின்மயி வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் குடும்பத்தில் வயதானவரிடம் மின்சார கட்டணம் என்ற பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது. ஒ.டி.பி எண் பகிரப்படாமலேயே இந்த மோசடியை எப்படிச் செய்தார்கள் என்பது கொடுமையாக இருக்கிறது. செல்போனுக்கு வந்த லிங்கை க்ளிக் செய்ததும் வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல் போய் விட்டது. வயதானவர்களைக் குறி வைத்து இது போன்ற மோசடி நடக்கிறது. சைபர் கிரைமில் புகார் செய்துள்ளோம். உங்களுக்குத் தெரிந்த வயதானவர்களிடம் சொல்லி அவர்களைப் பாதுகாக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x