Published : 05 Aug 2023 06:13 AM
Last Updated : 05 Aug 2023 06:13 AM

கேரள கிரிப்டோகரன்சி வணிகர்களிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 கர்நாடக போலீஸார் கைது

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த கிரிப்டோகரன்சி வணிகர்களிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 கர்நாடக போலீஸார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர்,ஆன்லைன் முதலீட்டு திட்டத்தில் ரூ.26 லட்சத்தை இழந்தார். இதுதொடர்பாக அவர் பெங்களூரு வொயிட்பீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து, மோசடியில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த 2 பேரை பிடித்தனர்.

இருவரும் மோசடி செய்த பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த கிரிப்டோகரன்சி வணிகர்கள் அகில், நிகில் உதவியுடன் பணத்தை முதலீடு செய்திருப்பதாக இருவரும் போலீஸில் வாக்குமூலம் அளித்தனர்.

ரூ.10 லட்சம் லஞ்சம்: இதைத் தொடர்ந்து கர்நாடக போலீஸார் அகில், நிகிலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அன்றிரவு திருச்சூரில் உள்ள ஓட்டலில் கர்நாடக போலீஸார் தங்கினர். அப்போது அகில், நிகில் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசிய கர்நாடக போலீஸார், ரூ.10 லட்சம் லஞ்சம் அளித்தால் வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து விடுவோம் என்று பேரம் பேசினர்.

இதன்பேரில் நிகிலின் தந்தை ரூ.3 லட்சத்தை திரட்டி, திருச்சூர் ஓட்டலில் தங்கியிருந்த கர்நாடக போலீஸாரிடம் அளித்தார். இதேபோல அகில், ஏடிஎம் அட்டை மூலம் ரூ.1 லட்சத்தை எடுத்து போலீஸாரிடம் கொடுத்தார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக அகில், நிகில் குடும்பத்தினர் வழக்கறிஞர்கள் மூலம் கொச்சி இணை போலீஸ் கமிஷனர் சசிதரணிடம் புகார் அளித்தனர். கர்நாடக போலீஸார் லஞ்சம் கேட்டு மிரட்டிய செல்போன் உரையாடலை ஆதாரமாக அளித்தனர். லஞ்ச பேர உரையாடலை கேட்ட சசிதரண், கர்நாடக போலீஸாரை மடக்கிப் பிடிக்க உத்தரவிட்டார்.

இதன்பேரில் கேரள போலீஸார் கர்நாடக போலீஸாரை சோதனை செய்தபோது அவர்களிடம் ரூ.3.95 லட்சம் ரொக்கம் இருந்தது. அதற்கு அவர்களிடம் முறையான ஆவணம் இல்லை. இதைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த பெங்களூரு வொயிட்பீல்டு இன்ஸ்பெக்டர் சிவபிரகாஷ், காவலர்கள் சிவண்ணா, விஜயகுமார், சந்தோஷ்ஆகியோரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 கர்நாடக போலீஸார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 4 பேருக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இதுதொடர்பாக அகில இந்திய மெய்நிகர் சொத்து வியாபாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த கிரிப்டோகரன்சி வணிகர்கள் கூறியதாவது: நாங்கள் சட்டரீதியாக கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால் டெல்லி,குஜராத், கர்நாடகா, தெலங்கானாஉள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போலீஸார் எங்கள் மீது வழக்குகளை பதிவு செய்து எங்களது வங்கிக் கணக்குகளை முடக்கி வருகின்றனர். இதனால்போலீஸாருக்கு பெரும் தொகையை லஞ்சமாக அளிக்கவேண்டிய சூழல் இருக்கிறது. போலீஸாரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் நாங்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம். எங்கள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு கிரிப்டோகரன்சி வணிகர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x